கூட்டத்தொடர் முழுதும் அதிமுக.,வினர் சஸ்பெண்ட்: பேச அனுமதி மறுப்பதாக இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
கூட்டத்தொடர் முழுதும் அதிமுக.,வினர் சஸ்பெண்ட்: பேச அனுமதி மறுப்பதாக இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
UPDATED : ஜூன் 26, 2024 01:06 PM
ADDED : ஜூன் 26, 2024 10:08 AM

சென்னை: ‛‛விதிப்படி கடிதம் கொடுத்தாலும், சட்டசபையில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது '' என எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ் கூறினார்.
சஸ்பெண்ட்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு குறித்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் எனக்கூறி அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவர்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அமளியில் ஈடுபட்டதால், இந்த கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
வலுக்கட்டாயம்
சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் இ.பி.எஸ்., கூறியதாவது: கள்ளச்சாராய விவகாரம் பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்பதால் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விவாதிக்க சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தோம். விதிகளை பின்பற்றி கடிதம் கொடுக்குமாறு சபாநாயகர் கூறினார். அதன்படி கொடுத்தாலும் சபாநாயகர் பேச அனுமதி மறுக்கிறார். இந்த அரசு மக்களுக்கு நன்மை செய்யவில்லை. பல பேர் இறந்து குடும்பம் அனாதையாக நிற்கிறது. சபாநாயகர் நடுநிலையோடு செயல்படவில்லை; எங்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி உள்ளார்.
அரசியல் கூடாது
சபாநாயகர் நடுநிலையோடு பேசவில்லை. அவரின் கருத்துகள் வேதனை அளிக்கிறது. சபாநாயகர் அரசியல் பேச வேண்டும் என்றால் ராஜினாமா செய்துவிட்டு பேச வேண்டும். அந்த இருக்கையில் அமர்ந்து நடுநிலையோடு பேச வேண்டும்
தேர்தலுக்காக
அதிமுக ஆட்சி காலத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள். அதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது.ஜாதி வாரி கணக்கெடுப்பு 6 மாதங்களுக்குள் மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த குழுவின் கால அவகாசத்தை நீட்டிக்கவில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் அவசர அவசரமாக ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மேற்கொள்ள தீர்மானம் கொண்டு வருகிறார். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு உரிமை உள்ளது. மற்றவர்களின் துயரத்தை பற்றி ஆளுங்கட்சிக்கு கவலையில்லை. சம்பிரதாயத்திற்காக சட்டசபை கூட்டத்தொடரை நடத்துகின்றனர். ஒரு நாளில் 5 மானிய கோரிக்கைகளை நிறைவேற்றுகிறார்கள். எப்படி பேச முடியும்?
அவையில் நாங்கள் பேசுவதை தடுக்கின்றனர். பேச முடியாது எனக்கூறிவிட்டு முதல்வர் எப்படி 15 நிமிடங்கள் பேசுகிறார்? சட்டசபையில் அனைவருக்கும் ஒரே விதி. வேண்டும் என்றே திட்டமிட்டு நாங்கள் வெளியேறிய பிறகு பேசுகின்றனர். அதிமுக.,வினர் மக்கள் பிரச்னையை பற்றி பேசினால் குரல்வலையை நசுக்க முயற்சிக்கின்றனர்; இது ஜனநாயக படுகொலை. சட்டசபையில் ஆளும்கட்சிக்கு ஒரு நீதி; எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியாக இருக்கிறது. கள்ளச்சாராய மரணத்தை விட வேறு என்ன முக்கியமான பிரச்னைகள் இருக்கிறது?. இவ்வாறு இ.பி.எஸ்., கூறினார்.