கோவில் விழாவுக்கு நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையே: ஐகோர்ட் கருத்து
கோவில் விழாவுக்கு நன்கொடை பெற மறுப்பதும் தீண்டாமையே: ஐகோர்ட் கருத்து
ADDED : மே 13, 2025 04:54 AM

சென்னை : 'ஜாதியை காரணம் காட்டி, கோவில் விழாவுக்கு நன்கொடை பெற மறுப்பதும், தீண்டாமையின் இன்னொரு வடிவமே' என, சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
'பெரிய புராணம்' என்ற நுாலை எழுதியவர் சேக்கிழார். இவர், சென்னை குன்றத்துாரில் கட்டிய காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வர சுவாமி கோவில் பிரம்மோற்சவம், இன்று துவங்கி, 16ம் தேதி வரை நடக்கிறது.
'பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நடக்கும் விழாவுக்கு, குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் மட்டுமே நன்கொடைகள் வசூலிக்கப்படுகின்றன; மற்ற சமுதாயத்தினரிடம் இருந்து நன்கொடைகள் வசூலிக்கப்படுவதில்லை' என, குன்றத்துாரை சேர்ந்த இல.பாண்டியராஜன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:
தீண்டாமை, இந்த நாட்டில் பல்வேறு வழிகளில் தொடந்து வருகிறது. ஜாதியை காரணம் காட்டி, நன்கொடை பெற மறுப்பதும், தீண்டாமையின் இன்னொரு வடிவம் தான்.
கடவுள் முன், ஜாதி ஒரு அளவுகோலாக இருக்கக்கூடாது என, ஏற்கனவே இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து சமுதாயத்தினரும் நன்கொடை வழங்க அனுமதி வேண்டும் என்ற மனுதாரர் மனுவை பரிசீலித்து, ஹிந்து அறநிலையத்துறை தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.