ADDED : ஜூலை 07, 2025 10:19 PM

 சென்னை: மதுரை மாநகராட்சியின் அனைத்து மண்டல தலைவர்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சியில் வரிவிதிப்பு முறைகேடு தொடர்பாக  மண்டல தலைவர்களான பாண்டிச்செல்வி, சரவண புவனேஸ்வரி, சுவிதா ஆகியோரிடமும் அவர்களின் கணவர்களிடமும்  போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விவகாரம் தொடர்பாக, அமைச்சர் நேரு தலைமையில் இன்று மதுரை மாநகராட்சி அலுவலகத்தில் அமைச்சர்கள் மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் கமிஷனர் சித்ரா விஜயன் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது.
இதில் மேயர் இந்திராணிக்கு அமைச்சர் நேரு கடுமை எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விசாரணை முடிவில், மண்டல தலைவர்கள் அனைவரையும் பதவி விலகும்படி தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது.
கட்சி நிர்வாகிகளுடனான ஒன்-டூ-ஒன் 'உடன்பிறப்பே வா' நிகழ்ச்சியின் போது தேவையான இடங்களில் தயவு தாட்சண்யமின்றி பதவியைப் பறிப்பேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்நிலையில், மதுரை மேயர் இந்திராணியின் கணவர் சமீபத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாகவே மண்டல தலைவர்களை ராஜினாமா செய்யும்படி தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுரை தி.மு.க.,வில் நிலவும் கோஷ்டி பூசல்களும் இந்த விவகாரத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக, விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

