ரூ.20 ஆயிரம் லஞ்சம்; சிக்கினார் சார்பதிவாளர் ஜியாவுதீன்!
ரூ.20 ஆயிரம் லஞ்சம்; சிக்கினார் சார்பதிவாளர் ஜியாவுதீன்!
UPDATED : ஜன 28, 2025 09:13 PM
ADDED : ஜன 28, 2025 09:11 PM

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் சொத்து பதிவு செய்வதற்காக ரூ.20,000 லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் ஜியாவுதீன் கைது  செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செட்டியம்பட்டியை சேர்ந்தவர் மகாராஜா. இவர் தனது மூதாதையரின் சொத்துக்களை பங்கு பிரித்து பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் ஜியாவுதீனை சந்தித்து விண்ணப்பித்துள்ளார்.
அப்போது மகாராஜாவிடம், ஜியாவுதீன் பத்திரம் பதிவு செய்வதற்கு முதலில் ரூ. 40,000  லஞ்சம் கேட்டுள்ளார். இதையடுத்து பேச்சு வார்த்தைக்கு பின் ரூ. 20 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் பதிவு செய்து தருகிறேன் என ஜியாவுதீன் தெரிவித்துள்ளார்.
மகாராஜாவுக்கு லஞ்சம் கொடுக்க விருப்பமில்லை. அவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தலின்படி, சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று ஜியாவுதீனிடம் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரம்  கொடுத்துள்ளார். பணத்தை தான் வாங்காத ஜியாவுதீன், பத்திர எழுத்தரின் உதவியாளர் எடிசன் இடம் கொடுக்கும்படி கூறியுள்ளார்.
அதன்படி அவரிடம் மகாராஜா ரூ.20 ஆயிரத்தை வழங்கினார். அவர் பணத்தை வாங்கிக் கொண்ட போது லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார். இதையடுத்து லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் ஜியாவுதீன் மற்றும் எடிசன் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

