237 மரங்களுக்கு மறுவாழ்வு; மாற்று இடத்தில் நடவு செய்யும் பணி துவக்கம்
237 மரங்களுக்கு மறுவாழ்வு; மாற்று இடத்தில் நடவு செய்யும் பணி துவக்கம்
ADDED : ஏப் 21, 2025 07:31 AM

திருச்சி: திருச்சி, பஞ்சப்பூரில் காய், கனி மார்க்கெட் அமைக்க, பசுமை பூங்கா இடம் தேர்வு செய்யப்பட்டதால், அங்கிருந்த மரங்களை வேருடன் பிடுங்கி, வேறு இடத்தில் நடவு செய்யும் பணி துவங்கி உள்ளது.
திருச்சி மாநகர மக்கள் பொழுது போக்குவதற்காக, 2013ல், திருச்சி -மதுரை தேசிய நெடுஞ்சாலையில், பஞ்சப்பூர் அருகே, 22 ஏக்கரில் மரங்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவையுடன் பசுமை பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு, 12 ஆண்டுகளுக்கு பின், பூங்காவின் ஒரு பகுதியில் காய், கனி மார்க்கெட் அமைக்க, திருச்சி மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
அப்பணியை மேற்கொண்டுள்ள, 'கிரீன் கேர்' அமைப்பினர் கூறியதாவது: பசுமை பூங்காவில், காய், கனி மார்க்கெட் கட்டடங்கள் அமையும் பகுதியில் உள்ள மரங்கள் மட்டும் அகற்றப்பட உள்ளன. தற்போது, 237 மரங்களை வேருடன் பிடுங்கி, மறு நடவு செய்ய உள்ளோம். அவற்றை முறையாக பராமரித்து வளர்ப்பதில் கவனம் தேவை.
மரங்கள் நடவு செய்வதற்கு முன், மரங்கள் வளர்வதற்கான சரியான மண்ணை தேர்வு செய்து, அந்த பகுதியில் ஆழமாக குழி தோண்டி நட வேண்டும். மறு நடவு செய்யப்படும் மரங்களின் கிளையை வெட்டி அதன் மீது சாணம் பூசி, சாக்குப் பை கட்டி, தினமும் தண்ணீர் ஊற்றி துளிர்க்கும் வகையில் பராமரிக்க வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் தேசிய நெடுஞ்சாலையில், 251 மரங்கள் அகற்றப்பட்டு, வேறு சாலையோரம் மறு நடவு செய்துள்ளோம். அவை அனைத்தும் துளிர் விட்டுள்ளன. திருச்சியில், சட்டக்கல்லுாரி வளாகத்தில் 14 மரங்களை அகற்றி, வேறு வளாகத்தில் நட்டுள்ளோம். தற்போது, அவை நன்கு வளர்ந்துள்ளன.
இதேபோல், டி.வி.எஸ்., டோல்கேட் பகுதியில் நுாலகம் கட்ட அகற்றப்பட்ட 54 மரங்கள், சுற்றுலா மாளிகை வளாகத்தில் நடப்பட்டு, நன்கு வளர்ந்து வருகின்றன. பசுமை பூங்காவில் இருந்து, 70 மரங்களை வேருடன் அகற்றி, மன்னார்புரம் பகுதியில், தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் மறுநடவு செய்துள்ளோம்.
ஒவ்வொரு மரத்துக்கும் குறிப்பிட்ட அவகாசம் அளித்து, மறுநடவு செய்ய வேண்டும். இங்குள்ள, 237 மரங்களுக்கு மீண்டும் உயிர் கொடுப்போம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

