ADDED : அக் 19, 2025 12:55 AM
சென்னை: தமிழகத்தில் நடப்பாண்டு கூடுதலாக, 5,233 உப்பள தொழிலாளர்களுக்கு, தலா 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
உப்பு உற்பத்தி பருவகால தொழில். தமிழகத்தில் உப்பள தொழிலாளர்களுக்கு, ஆண்டுக்கு ஒன்பது மாதங்கள் மட்டும் வேலை கிடைக்கிறது. இதனால், தமிழக உடலுழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உப்பள தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மழை காலத்தில், ஆண்டுக்கு தலா, 5,000 ரூபாய் நிவாரணத்தை, தமிழக அரசு, 2021 - 22 முதல் வழங்கி வருகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில், 32,611 தொழிலாளர் குடும்பங்களுக்கு, 16.32 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டில் கூடுதலாக, 5,233 தொழிலாளர்களுக்கு தலா, 5,000 ரூபாய், தமிழக அரசின் உப்பு நிறுவனத்தில் பணிபுரியும், 600 தற்காலிக தொழிலாளர்களுக்கு தலா, 5,000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. இதற்காக அரசு, 8.28 கோடி ரூபாய் செலவிட உள்ளது.

