முழு வீச்சில் நிவாரண நடவடிக்கை; ஆய்வுக்கு பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
முழு வீச்சில் நிவாரண நடவடிக்கை; ஆய்வுக்கு பின் முதல்வர் ஸ்டாலின் பேட்டி
ADDED : நவ 30, 2024 11:36 AM

சென்னை: 'மழை நிவாரண நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன்' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
புயல் முன்னெச்சரிக்கை பணிகள் தொடர்பாக சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து அதிகாரிகளிடம் ஸ்டாலின் கேட்டறிந்தார். அவர், சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: 2, 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தமிழக அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருக்கிறது. இன்று இரவு புயல் கரையை கடக்கும் என்று செய்தி வந்து இருக்கிறது. இந்நிலையில் கட்டுப்பாட்டு அறையில் மாவட்ட கலெக்டர்களிடம் ஆலோசனை நடத்தினேன். மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இரவு நிச்சயமாக கடுமையான மழை பெய்யும் என்பதால், நிவாரண முகாம்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளது.
கனமழை புயலை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன. இரவு முழுவதும் மழை பெய்த போதும் சென்னையில் எங்கும் மழை நீர் தேங்கவில்லை. வழக்கமாக மழை நீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததால் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. நிவாரண நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள உத்தரவிட்டு உள்ளேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.