மழையால் பாதித்த மக்களுக்கு 'ட்ரோன்' வாயிலாக நிவாரணம்
மழையால் பாதித்த மக்களுக்கு 'ட்ரோன்' வாயிலாக நிவாரணம்
ADDED : அக் 17, 2024 02:24 AM

சென்னை,:படகுகள் செல்ல முடியாத சூழலில், தாழ்வான பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், மூன்று ட்ரோன்கள் வாயிலாக உணவு பொருட்கள் வினியோகிக்கப்பட உள்ளன.
சென்னையில் கடந்தாண்டு வடகிழக்கு பருவமழையின்போது, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்டது.
மாநகராட்சி மற்றும் தன்னார்வலர்கள் வாயிலாக குடிநீர், உணவு பொருட்கள் படகுகளில் கொண்டு செல்லப்பட்டு வினியோகிக்கப்பட்டன.
சில இடங்களில் படகுகள் செல்ல முடியாத நிலையில், அரசின் உதவி கிடைக்காமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர்.
மேலும், சுகாதாரமற்ற குடிநீர் பருகியதால், வாந்திபேதி, காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டனர்.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை துவங்கி, சென்னையில் மழை பெய்து வருகிறது.
வரும் டிசம்பர் மாதம் வரை மழை பொழிவு இருப்பதால், மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, மழை வெள்ளம் பாதிக்கப்படும் பகுதிகளில், படகுகள் செல்ல முடியாத சூழலில், குடியிருப்பு களில் வசிப்பவர்களுக்கு உணவு வழங்க, 'ட்ரோன்'கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இதற்காக, கருடா, கோத்தாரி, டிராகோ ஆகிய மூன்று ட்ரோன்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்த ட்ரோன்களில், பால், பிரட், குடிநீர் பாட்டில்கள் மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட 5 கிலோ முதல் 10 கிலோ வரையிலான அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல முடியும்.
இவை, 40 மீ., உயரத்தில், 2 கி.மீ., துாரம் வரை பறக்கும்.
ட்ரோன்களில் உணவு பொருட்கள் கொண்டு செல்வதற்கான முன்னோட்டம், ரிப்பன் மாளிகையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேரு, துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடந்தது.

