இது உங்கள் இடம்: ஓட்டு போட்ட பாவத்துக்கு பரிகாரம்!
இது உங்கள் இடம்: ஓட்டு போட்ட பாவத்துக்கு பரிகாரம்!
ADDED : மார் 04, 2024 02:26 AM

குரு பங்கஜி, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'நீங்கள் பா.ஜ.,வில் சேர்ந்து விடுவீர்கள் என சொல்கின்றனரே' என்று கேட்ட செய்தியாளரை பார்த்து, 'அப்படி சொன்னவனை, செருப்பால் அடிப்பேன்' என, ஆவேசமாக பதில் கூறியிருக்கிறார், காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர். மேலும், ஊடகத்தினர் பிழைத்துப் போகட்டும் என்று தான் பேட்டி கொடுப்பதாகவும், மார்தட்டி இருக்கிறார் திருநாவுக்கரசர்.
பொறுப்பான எம்.பி., பதவியில் இருக்கும் ஒரு மூத்த தலைவரே, இப்படி ஆணவத்துடன், அகம்பாவமாக பேட்டியளிப்பதை பார்த்து, நம் அரசியல் இப்படி தரம் தாழ்ந்து போய் விட்டதே என்ற வருத்தம் தான் ஏற்படுகிறது. இந்த சம்பவத்தில் இருந்து ஒரு உண்மை, தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
அது என்னவென்றால், நாகரிகம், சொல்நயம், பணிவு, மனிதநேயம் போன்ற பண்புகள், அறவே அற்றுப் போனவர்களை தேர்தலில் ஓட்டு போட்டு, எம்.பி., போன்ற பொறுப்பான பதவிகளில் அமர்த்தியுள்ள மக்கள் தான், தங்களை நொந்து கொள்ள வேண்டும்.
இன்னும் சொல்ல போனால், இவர்களை டில்லிக்கு அனுப்பி வைத்த பாவத்திற்கு, கோவிலில் சென்று கடவுளிடம் பாவமன்னிப்பு கேட்க வேண்டும்.
அத்துடன், 'கடவுளே... இனி இதுபோன்ற மனிதர்களை எம்.பி., - எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்து அனுப்ப மாட்டோம்' எனவும் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். இதுதான் மக்கள் செய்த பாவத்திற்கு பரிகாரமாக அமையும்.

