ADDED : மார் 27, 2025 01:05 AM
சென்னை:''எட்டையபுரத்தில் உள்ள பாரதியார் இல்லம், 65 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும்,'' என, செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் கூறினார்.
சட்டசபையில் நடந்த விவாதம்:
அ.தி.மு.க., - கடம்பூர் ராஜு: துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரத்தில், பாரதியார் வாழ்ந்த வீடு இடிந்து விழுந்துள்ளது. அதை விரைந்து புனரமைக்க வேண்டும். அனைத்து நினைவு மண்டபங்களும் சிறப்பாக பராமரிக்கப்பட வேண்டும்.
அமைச்சர் சாமிநாதன்: எட்டையபுரத்தில் உள்ள பாரதியார் வீட்டை, மூன்று மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்தேன். மிக மோசமாக இருந்தது. அது நுாறாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பாரதியார் பிறந்து, வாழ்ந்த வீடு. அதை புனரமைக்கும் பணி, 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அமைச்சர் தங்கம் தென்னரசு: மாநிலத்தில் உள்ள, 15 பாரம்பரிய கட்டடங்கள் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் என, பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிதியில், பாரதியார் இல்லமும் புதுப்பிக்கப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.