கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான அறிக்கை ரெடி: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பான அறிக்கை ரெடி: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
ADDED : ஜூன் 25, 2024 02:04 PM

சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பான அறிக்கை தயாராக உள்ளது என தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று(ஜூன் 25) பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பான அறிக்கை தயாராக உள்ளது என தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தெரிவித்தார். மனுதாரரான வழக்கறிஞர் கே.பாலு, “முதலில் கள்ளச்சாராயம் குடித்தவர்கள் இறந்த நிலையில், மாவட்ட கலெக்டரின் தவறான அறிவிப்பால் கூடுதல் மரணங்கள் நிகழ்ந்துள்ளன” என்றார்.
இரு தரப்பு வாதங்களை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அ.தி.மு.க., தாக்கல் செய்த வழக்குடன் சேர்த்து இந்த வழக்கையும் நாளைக்கு விசாரணைக்கு பட்டியலிடும்படி உத்தரவிட்டனர்.