தகவல் ஆணையரை தரக்குறைவாக பேசிய நபருக்கு கண்டிப்பு
தகவல் ஆணையரை தரக்குறைவாக பேசிய நபருக்கு கண்டிப்பு
ADDED : டிச 13, 2025 12:48 AM
சென்னை: மேல் முறையீட்டு வழக்கு விசாரணையின் போது, 'நீங்கள் ஆணையராக இருக்க தகுதி இல்லாதவர்' என, மாநில தகவல் ஆணையரை நோக்கி கூறிய நபரால், தகவல் ஆணையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, ஓட்டேரியை சேர்ந்தவர் குணசேகர்; இவர் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ், சென்னை உயர் நீதிமன்ற பொது தகவல் அலுவலரிடம் தகவல் கேட்டு, 2023ல் விண்ணப்பித்தார்.
அதில், 'முன்னாள், இந்நாள் நடுவர், தலைமை குற்றவியல் நடுவர், மாவட்ட முதன்மை நீதிபதி, தலைமை பதிவாளர், நீதிமன்ற ஊழியர்கள் ஆகியோர் மீது, குற்றவியல் வழக்கு, தனிப்பட்ட வழக்கு மற்றும் அவதுாறு வழக்கு தொடர அனுமதி கடிதம் பெற வேண்டுமா; ஆம் எனில், எந்த அதிகாரிக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்' என, தகவல் கேட்டிருந்தார்.
மனு மீது உரிய நடவடிக்கை இல்லாததால், மனுதாரர் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார்.
விசாரணையில் ஆஜரான, பொதுத் தகவல் அலுவலரின் பிரதிநிதி, 'மனுதாரருக்கு தகவல்கள் வழங்கப்பட்டன ' என, அதற்கான ஆவணங்களை ஆணையத்தின் முன் சமர்ப்பித்தார்.
மனுதாரர் கூறுகையில், 'என் மனுவுக்கு தவறான மற்றும் முரணான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன' என்றார்.
ஆவணங்களை பரிசீலனை செய்த ஆணையர் பிரியகுமார், ''பொதுத் தகவல் அலுவலர் வழங்கிய தகவல்கள் சரியானதாக உள்ளன,'' என்றார்.
அதை கேட்ட மனுதாரர், 'நீங்கள் ஆணையராக இருக்க தகுதி இல்லாதவர். சட்ட புரிதல் இல்லாமல் ஆணையிடுகிறீர்கள். பொதுத் தகவல் அலுவலரை சரியாக விசாரிக்கவில்லை' என்றார்.
இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மனுதாரரை ஆணையர் கண்டித்தார்.
அதைத் தொடர்ந்து, தகவல் ஆணையர் பிரியகுமார் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர், இவ்வாணை கிடைத்த 15 நாட்களுக்குள், தனக்கு தேவைப்படும் தகவல்கள், வழங்கப்பட்ட தகவல்கள் குறித்து, எழுத்து வாயிலாகவும், அதேபோல், பொதுத் தகவல் அலுவலர், வழங்கப்பட்ட தகவல்கள் குறித்து ஒரு அட்டவணை தயாரித்து அறிக்கையாகவும், வரும் 30ம் தேதிக்குள் தவறாமல் நேரில் ஆஜராகி ஆணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

