உரிமத்தை புதுப்பித்து வழங்க பிளாஸ்டிக் நிறுவனங்கள் கோரிக்கை
உரிமத்தை புதுப்பித்து வழங்க பிளாஸ்டிக் நிறுவனங்கள் கோரிக்கை
ADDED : ஜன 07, 2024 01:55 AM
சென்னை:'பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கட், எண்ணெய், உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை' என்று சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதையடுத்து, பிளாஸ்டிக் கவர் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த நிறுவனங்கள், ஏற்கனவே பெற்றிருந்த உரிமத்தை புதுப்பித்து வழங்க, அரசாணை வெளியிடுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இதுதொடர்பாக, உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம், வெளியிட்டுள்ள அறிக்கை:
எங்கள் சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் அனைத்தும், உயர் நீதிமன்ற தீர்ப்பில் தெளிவாக தெரிவிக்கப்பட்டு உள்ளன.
அந்த தீர்ப்பின் அடிப்படையில், 'பிரைமரி பேக்கிங்கிற்கு' பயன்படுத்தப்படும் கவர்களை முழுதும் அனுமதிக்கும் விதமாக, அரசாணை வெளியிட வேண்டும்.
பல ஆண்டுகளாக பிளாஸ்டிக் கவர்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்திற்கும் ஏற்கனவே பெற்றிருந்த உரிமத்தை உடனே புதுப்பித்து, அரசாணை வெளியிட வேண்டும்.
இதை வெளியிடும் வரை, பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகளிடம் தீர்ப்பு குறித்து விளக்கி, வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.