'டமில்நாடு' என்பதை 'தமிழ்நாடு' என்பதாக ஆங்கிலத்தில் எழுத்து மாற்ற கோரிக்கை
'டமில்நாடு' என்பதை 'தமிழ்நாடு' என்பதாக ஆங்கிலத்தில் எழுத்து மாற்ற கோரிக்கை
ADDED : நவ 21, 2024 06:33 AM

மதுரை: 'தமிழ்நாடு' பெயரின் உச்சரிப்பு மாறாமல், அப்படியே அமையும் வண்ணம் ஆங்கில வடிவத்தில் TAMIL NADU (டமில்நாடு) என்பதை 'THAMIZH NAADU' என அரசு ஆவணங்களில் இடம் பெற நடவடிக்கை எடுக்க தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
கடம்பூர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழின் சிறப்பு, 'ழ'கரம். இது தமிழ் தவிர நடைமுறையில் உள்ள எந்த மொழியிலும் இல்லை. இலக்கண, இலக்கிய வளத்தை உலகிற்கு பறைசாற்றும் நோக்குடன், நம் முன்னோர் திட்டமிட்டு பயன்படுத்திய எழுத்துதான் இச்சிறப்பு, 'ழ'கரம்.
தமிழை, பிற மொழியைச் சேர்ந்தவர்கள் உச்சரிக்கும்போது இச்சிறப்பு குறையாமல் இருக்க, 'ழ'கரம் சரியாக உச்சரிக்கப்பட வேண்டும். இலக்கியச் சான்றுகளில் தமிழ், தமிழ்நாடு, தமிழ்ச்சங்கம் பற்றி காணலாம்.
'தமிழ்நாடு' என்பதை ஆங்கிலத்தில் 'டமில் நாடு' என உச்சரிக்கும் வகையில் அதன் TAMIL NADU எழுத்து வடிவம் உள்ளது. இப்படி உச்சரிப்பதால் மொழிக்கான சிறப்பு வடிவம் முற்றிலும் சிதையும்.
பிழையான ஒலிவடிவத்தில் எழுதுவது, பேசுவதால் நம் முன்னோர் எந்த நோக்கத்திற்கு 'ழ'கர உச்சரிப்பை எழுதி பயன்படுத்தினரோ அதை மாற்றி பொருளற்ற ஒலி, எழுத்து வடிவத்தை, பிரிதோர் மொழியில் கையாள்வது, வடிவமைப்பது வரலாற்றுத் தவறு.
'தமிழ்நாடு' பெயரின் உச்சரிப்பு மாறாமல், அப்படியே அமையும் வண்ணம் ஆங்கில வடிவத்தில் TAMIL NADU - டமில்நாடு என்றிருப்பதை, THAMIZH NAADU என அரசு ஆவணங்களில் இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கர்நாடகாவில் அம்மாநிலத்திற்கென தனிக்கொடி உருவாக்கப்பட்டுள்ளது. அது தேசியக் கொடி அருகே அரசு நிகழ்ச்சிகளில் இடம்பெறுகிறது. பண்டைக் காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த மூவேந்தர்களின் மீன், புலி, வில் அம்பு சின்னங்களை கொண்ட கொடியை உருவாக்க வேண்டும்.
அது அரசின் நிகழ்ச்சிகளில் இடம்பெற வலியுறுத்தி பிரதமர் அலுவலக முதன்மைச் செயலர், உள்துறை செயலர், தமிழக தலைமைச் செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் மனுவில் கூறி இருந்தார்.நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு அளித்த தீர்ப்பில், மனுவை மத்திய, மாநில அரசுகள் விரைவாக பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

