கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை காலியிடமாக அறிவிக்க கோரிக்கை
கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை காலியிடமாக அறிவிக்க கோரிக்கை
ADDED : செப் 28, 2025 06:26 AM
கோவை: தமிழகம் முழுதும் உள்ள அரசு பள்ளிகளில், கூடுதலாக தேவைப்படும் ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளன. அவற்றை காலி பணியிடங்களாக அறிவிக்க ஆசிரியர்கள் மத்தியில் கோரிக்கை வலுத்துள்ளது.
தமிழகத்தில், 13 ஆண்டுகளாக, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆசிரியர்களின் பணி நிரவல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
அதே நேரம், மாநிலம் முழுதும் உள்ள, 80 சதவீத அரசு பள்ளிகளில், கூடுதலாக தேவைப்படும், 6,000க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
இதனால், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படுவதோடு, பள்ளி கல்வித்துறையின் திட்டங்களை முறையாக செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் சரவணகுமார் கூறியதாவது:
ஒரு பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் போது, அங்குள்ள ஆசிரியர் பணியிடங்கள் உபரியாக கருதப்படுகின்றன.
மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில், கூடுதல் தேவை க்கான பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன.
இப்பணியிடங்களை காலி பணியிடங்களாக முறைப்படி, பள்ளி அளவை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான், பொது மாறுதல் கலந்தாய்வின் போது, இப்பணியிடங்களை ஆசிரியர்கள் தேர்வு செய்ய முடியும்.
தற்போதுள்ள சூழலில், பணி நிரவல் கலந்தாய்வில் கூடுதல் தேவை பணியிடங்களை தேர்வு செய்ய ஆசிரியர்கள் தயங்குகின்றனர். கடந்த இரு ஆண்டுகளாக இப்பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, 'மேப்பிங்' செய்வதில் சிக்கல் நீடிப்பதே காரணம்.
எனவே, கூடுதலாக தேவைப்படும் பணியிடங்களை காலி பணியிடங்களாக அரசு அறிவிக்க வேண்டும். இல்லையெனில், ஆசிரியர் பற்றாக்குறை தொடரும்; மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.