வெள்ளியங்கிரி மலையில் பிளாஸ்டிக் பரிசோதனை பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்
வெள்ளியங்கிரி மலையில் பிளாஸ்டிக் பரிசோதனை பக்தர்கள் ஒத்துழைக்க வேண்டுகோள்
UPDATED : பிப் 17, 2024 07:26 AM
ADDED : பிப் 16, 2024 09:03 PM

பூண்டி, வெள்ளியங்கிரி மலை ஏற, அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து, மலையேறும் பக்தர்களிடம் பிளாஸ்டிக் கொண்டு செல்வதை தடுக்க பரிசோதனை துவங்கப்பட்டுள்ளது.
போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட தென் கைலாயம் எனப்படும் பூண்டி, வெள்ளியங்கிரி மலை ஏற, மார்ச் 1ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என, வனத்துறையினர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், வழக்கம்போல பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை பக்தர்களும் மலையேற அனுமதிக்க வேண்டும் என, பக்தர் ஒருவர் கோர்ட்டில் வழக்கு தொடுத்து இருந்தார். அதனைத்தொடர்ந்து, பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து, கடந்த, 12ம் தேதி முதல் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தற்போது, மலைக்கு செல்லும் வழியில், வரிசையாக செல்ல கட்டைகள் கட்டப்பட்டு, வனத்தையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த விழிப்புணர்வு பிளக்ஸ் வைத்துள்ளனர். மலையேறும் பக்தர்கள், வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை வீசி வருவதை தடுக்கும் வகையில், கடந்தாண்டை போலவே, பிளாஸ்டிக் கொண்டு செல்கிறார்களா என, பரிசோதனை செய்து அனுப்பும் பணி துவங்கியுள்ளது.
இதுகுறித்து, போளுவாம்பட்டி வனச்சரகர் சுசீந்திரநாத் கூறுகையில், ''வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மலையேற தேவையான வசதிகள் ஏற்படுத்தி வருகிறோம்.
வனப்பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருட்களை வீசி செல்வதை தடுக்கும் வகையில், கடந்தாண்டை போலவே, மலையேறும் பக்தர்களிடம், 20 ரூபாய் டெபாசிட் பெற்று, பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களில் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்புகிறோம்.
மலையிலிருந்து கீழே இறங்கும் பக்தர்கள், ஸ்டிக்கர் ஒட்டிய பாட்டிலை கொடுக்கும்போது, டெபாசிட்டாக பெற்ற, 20 ரூபாயை மீண்டும் பக்தர்களிடமே வழங்கும் முறையை அமல்படுத்தியுள்ளோம். பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
தற்போது, நாளொன்றுக்கு மூன்று முதல் பத்து பக்தர்கள் மட்டுமே மலையேறி வருகின்றனர். மலைப்பகுதியில் கடைகள் அமைக்க மலைவாழ் மக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. விரைவில் கடைகள் திறக்கப்படும்,'' என்றார்.
- நமது நிருபர் -