ADDED : ஆக 09, 2026 11:01 PM
சென்னை: 'காவல் துறையினருக்கும், சிறை காவலர்களுக்கும் இடையேயான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்' என, முதல்வர் விஜய்க்கு, சிறைத்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சிறை காவலர்கள் கூறிய தாவது:
காவல் துறைக்கும், சிறைத்துறைக்கும், சீருடை பணியாளர் தேர்வாணையம் வாயிலாகவே, ஆட்கள் தேர்வு செய்யப் படுகின்றனர்.
காவல் துறையில், 15 ஆண்டுகள் பணி நிறைவு செய்த காவலர்களுக்கு, அடிப்படை ஊதியமாக, 20,600 ரூபாய் தரப்படுகிறது.
சிறை காவலர்களுக்கு, 1,100 ரூபாய் குறைவாக, 19,500 ரூபாய் தான் தருகின்றனர்.
அதுவே, 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்த காவலர்களுக்கு, அடிப்படை ஊதியம், 35,400 ரூபாய்; சிறை காவலர்களுக்கு, 14,800 ரூபாய் குறைத்து, 20,600 ரூபாய்.
ஒரே அரசின் கீழ், ஒரே மாதிரியான கல்வித்தகுதி உள்ளிட்டவையுடன், சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வாகி, பணியில் சேர்ந்த போதிலும், காவல் துறையினருக்கும், சிறை காவலர்களுக்கும் இடையே ஊதியத்தில் முரண்பாடு உள்ளது.
இதைக் களைய, முதல்வர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அவருக்கு மனு அனுப்பி உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
