வி.கே.டி., சாலை டெண்டர் தள்ளிவைப்பு 'பேட்ச் ஒர்க்' பணியை துவக்க கோரிக்கை
வி.கே.டி., சாலை டெண்டர் தள்ளிவைப்பு 'பேட்ச் ஒர்க்' பணியை துவக்க கோரிக்கை
ADDED : ஜன 26, 2025 04:38 AM
விக்கிரவாண்டி : வி.கே.டி. சாலை பணிக்கான டெண்டர் நிர்வாக சிக்கல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
வி.கே.டி. சாலை எனப்படும் விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் நான்குவழி சாலையில், விக்கிரவாண்டி முதல் பின்னலூர் வரை 63 கி.மீ., தூரத்திற்கான சாலை பணியை ரிலையன்ஸ் நிறுவனம் சரிவர செய்யாததால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
இப்பணியை மீண்டும் செய்யவும், கூடுதலாக மூன்று மேம்பாலங்கள் அமைக்க, புது திட்ட அறிக்கை தயார் செய்து ரூ. 923 கோடி நிதியை நகாய் ஒதுக்கீடு செய்து டெண்டர் கோரியது. கடந்த 23ம் தேதி டெண்டர் திறக்கப்பட இருந்தது. நிர்வாக சிக்கல் காரணமாக வரும் பிப்ரவரி 6ம் தேதி டெண்டர் திறக்க உள்ளனர். ஏற்கனவே வி.கே.டி. சாலையில் 'பேட்ச் ஒர்க்' பொங்கல் பண்டிகைக்கு பிறகு நடைபெறும் என அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால் பொங்கல் பண்டிகை முடிந்தும் 'பேட்ச் ஒர்க்' பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனர். விக்கிரவாண்டி முதல் கோலியனூர் வரை சாலையில் உள்ள மெகா பள்ளங்களை சரி செய்ய பேட்ச் ஒர்க் பணியை விரைவில் துவக்கிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

