ADDED : செப் 22, 2024 02:52 AM

திருப்பூர்:ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை:
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தை, பக்தர்கள் உயிரினும் மேலான விஷயமாக கருதுகின்றனர். கோடானு கோடி ஹிந்துக்களின் நம்பிக்கையை உடைக்கும் விதமாக, விலங்கு கொழுப்பு கலந்த லட்டு பிரசாதமாக வழங்கியிருப்பது அனைத்து ஹிந்துக்களுக்கும் மனவேதனையை ஏற்படுத்தியதோடு, நம்பிக்கையையும் சிதைத்துள்ளது.
ஆந்திராவில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், லட்டு தயாரிக்க விலங்கு கொழுப்பு பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்த
நிலையில், தற்போது ஆய்வக பரிசோதனையில் மாட்டு கொழுப்பு மற்றும் மீன் எண்ணெய் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தமிழக கோயில்களிலும் பக்தர்களுக்கு
தரமற்ற பிரசாதங்கள் வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு சென்னை ஐகோர்ட் சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தால் புனிதம் கேள்விக்குறியாகும் என்பதை, ஹிந்துக்கள் இனியாவது புரிந்து கொள்ள வேண்டும்.
ஹிந்துக்களாகிய நாம் புனிதமாக கருதும் பிரசாதத்தில், மாட்டு கொழுப்பு கலந்தது பற்றி கடவுளிடமும் முறையிடுவோம்.
இதற்காக, வரும் 28ம் தேதி தமிழகத்திலுள்ள ஆஞ்சநேய சுவாமி கோயில்களில், சிதறு தேங்காய் உடைத்து, திருப்பதி லட்டு விவகாரத்தில் தொடர்புடையவர்களை அந்த கடவுளே தண்டிக்க வேண்டுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

