அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு: புதிய சட்டம் இயற்றப்படும் என முதல்வர் உறுதி
அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு: புதிய சட்டம் இயற்றப்படும் என முதல்வர் உறுதி
ADDED : மார் 30, 2025 12:12 AM

சென்னை: அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில், இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக, சட்டசபை கூட்டத்தொடரில் புதிய சட்டம் இயற்றப்படும் என, முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாநில அளவிலான உயர் நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது:
வி.சி., தலைவர் திருமாவளவன்: கூட்டத்தில் பல்வேறு பிரச்னைகளை, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பாக புதிய சட்டம், இந்த சட்டசபை கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என, முதல்வர் உறுதி அளித்தார். தமிழகம் முழுதும், தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளில், பாதிக்கப்படும் மக்கள் மீது, வழக்குப்பதிவு செய்வது தொடர்கிறது. அதிகாரிகள் போக்கு கவலை அளிப்பதாக உள்ளது.
தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்திற்கு, ஆண்டுக்கு, 500 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். கேரளா பல்கலையில் இளங்கோவடிகள் இருக்கை அமைக்க, முதல்வர் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார். அதை, 2.50 கோடி ரூபாயாக உயர்த்த வேண்டும் என, மனு அளித்துள்ளோம். வேங்கை வயல் விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரினோம். அரசு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். எங்கள் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி உள்ளோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ., நாகை மாலி: தமிழகத்தில் பரவலாக தீண்டாமை குற்றங்கள் நடந்து வருகின்றன. இதை, ஒரு நாளில் தீர்க்க முடியாது. அரசு உறுதியாக இருந்தால் தான், இதுபோன்ற பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். தமிழக அரசு முனைப்பு காட்டுகிறது. ஆனால், காவல்துறையினரிடம், ஜாதிய மனோநிலை இருப்பதால், அரசின் வேகத்தில் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.
தீண்டாமை குற்ற வழக்குகளை, பெரும்பாலான இடங்களில், காவல் துறையினர் ஜாதிய மனப்போக்குடன் செயல்பட்டு, அந்த வழக்கை நீர்த்து போக செய்கின்றனர் பட்டியலின அரசு ஊழியர்களுக்கு, பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றோம். சட்டசபை கூட்டத் தொடரில் அறிவிப்பதாக முதல்வர் தெரிவித்தார். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.