'ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் போட்டியிட தடை விதிக்க முடியாது' ஐகோர்ட் மறுப்பு
'ராஜினாமா செய்தவர்கள் மீண்டும் போட்டியிட தடை விதிக்க முடியாது' ஐகோர்ட் மறுப்பு
ADDED : செப் 22, 2026 01:22 AM

சென்னை: 'எம்.எல்.ஏ.,க்கள் பதவியை ராஜினாமா செய்தவர்கள், மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது தொடர்பாக, நீதிமன்றம் சட்டத்திருத்தம் கொண்டு வர முடியுமா?' என, சென்னை உயர் நீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நல வழக்கு:
தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்தில், மக்கள் தீர்ப்பை புறக்கணித்து, அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் செலவை ஏற்கும் வகையில், பணத்தை டிபாசிட் செய்ய விதிமுறை வகுக்க வேண்டும் என, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு முடியும் வரை, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு, தலைமை
தொடர்ச்சி 16ம் பக்கம்
ராஜினாமா செய்தவர்கள்...
3ம் பக்கத் தொடர்ச்சி
நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலன் வாதாடியதாவது:
மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு வாரங்களில், எந்த காரணமும் இல்லாமல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வேறொரு கட்சி சார்பில் போட்டியிடுகின்றனர். அதனால், அவர்களை தேர்தல் செலவுக்கு பொறுப்பாக்கும் வகையில், செலவை வசூலிக்க வேண்டும்.
அதற்கு எந்த சட்டமும் இல்லாததால், நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியும்.
இவ்வாறு அவர் வாதாடினார்.
தேர்தல் கமிஷன் தரப்பில், நிரஞ்சன் ராஜகோபால் ஆஜராகி, ''தேர்தல் முடிவுகள் வெளியான பின், தேர்தல் கமிஷனுக்கு எந்த பங்கும் இல்லை. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல,'' என்றார்.
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.,க்களிடம் இருந்து, தேர்தல் செலவை வசூலிப்பது தொடர்பாகவும், அவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது தொடர்பாகவும் எந்த சட்டமும் இல்லாத நிலையில், நீதிமன்றம் சட்டத்திருத்தம் கொண்டு வர முடியுமா?
பார்லிமென்ட் தான் சட்டம் இயற்ற முடியும்; அந்த சட்டம் சரியானதா, இல்லையா என்பதை மட்டுமே நீதிமன்றம் ஆய்வு செய்ய முடியும்; சட்டம் இயற்றும்படி அரசுக்கு உத்தரவிட முடியாது.
எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு, மீண்டும் தேர்தலில் போட்டியிடும்போது, முந்தைய தேர்தலுக்கு செலவழிக்கப்பட்ட விபரங்களை வெளியிடும்படி, தேர்தல் கமிஷனிடம் கேள்வி எழுப்பலாம்.
ஆனால், அந்த செலவை, மீண்டும் போட்டியிடும் வேட்பாளர்களிடம் வசூலிக்கும்படி கேட்க முடியாது. அதேபோல, அவர்களை குறிப்பிட்ட காலத்துக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க முடியாது.
இவ்வாறு கூறிய நீதிபதிகள், வழக்கின் உத்தரவை தள்ளிவைத்தனர்.
