துணை முதல்வர் பதவிக்கு சேலம் மாநாட்டில் தீர்மானம்?
துணை முதல்வர் பதவிக்கு சேலம் மாநாட்டில் தீர்மானம்?
ADDED : ஜன 12, 2024 01:17 AM

மெது வடையை மென்றபடியே, ''பந்தை, அவங்க பக்கம் திருப்பி விடுங்கன்னு உத்தரவு போட்டிருக்காருங்க...'' என, பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''என்ன விஷயம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சமீபத்துல, சென்னையில நடந்த மாவட்டச் செயலர்கள் கூட்டத்துல பேசிய பழனிசாமி, 'தெருமுனை கூட்டங்கள், திண்ணை பிரசாரங்கள்ல, தி.மு.க.,வை எந்த அளவுக்கு திட்டுறீங்களோ, அதே அளவுக்கு பா.ஜ.,வையும் திட்டி பேசுங்க'ன்னு உத்தரவு போட்டிருக்காருங்க...
''அதுவும் இல்லாம, 'தேர்தலுக்கு பின்னாடி, நாம பா.ஜ.,வுடன் கூட்டணி அமைப்போம்னு, தி.மு.க., தரப்பு, சமூக வலைதளங்கள்ல கிளப்பி விடுது... அதையே நீங்க திருப்பி, தி.மு.க.,வுக்கும், பா.ஜ.,வுக்கும் தான் ரகசிய உறவு இருக்குன்னு, சிறுபான்மையினர் வசிக்கிற பகுதிகள்ல தீவிரமா பிரசாரம் செய்யுங்க'ன்னு உசுப்பேத்தி அனுப்பியிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''தொகுதி யாருக்குன்னு இப்பவே போட்டி உருவாயிட்டுல்லா...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த தொகுதிக்கு, யார் ஓய் போட்டி போடறா...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''இப்ப, சேலம் தி.மு.க., - எம்.பி.,யா பார்த்திபன் இருக்காரு... மறுபடியும் அவரே, அங்க களம் இறங்க தயாராகிட்டு இருக்காரு வே...
''இந்த நேரத்துல, இதே ஊரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்வகணபதியும் இவருக்கு போட்டியா களத்துல குதிச்சிருக்காரு... சுடுகாட்டு கூரை ஊழல் வழக்குல இருந்து, அவரை சமீபத்துல கோர்ட் விடுவிச்சிட்டுல்லா...
''இந்த உற்சாகத்துல, அவரும் சேலத்துல களம் இறங்க விரும்புதாரு வே... இவர், ஏற்கனவே எம்.பி.,யா டில்லியில வலம் வந்தவருங்கிறதால, தலைமையிடம் இப்பவே, 'துண்டு' போட்டிருக்காரு...
''இதனால, யாருக்கு சீட் தர்றதுன்னு தலைமைக்கு குழப்பம் வந்துட்டு... 'இதனால, தொகுதியை கடைசி நேரத்துல, காங்கிரஸ் பக்கம் தள்ளி விட்டாலும் ஆச்சரியமில்லை'ன்னு சேலம் மாவட்ட தி.மு.க.,வினரே பேசிக்கிடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''சீக்கிரம் பதவி உயர்வு வழங்கணும்னு, தீர்மானம் நிறைவேற்ற இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாருக்கு வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''சேலத்துல, தி.மு.க., இளைஞர் அணி மாநாடு நடத்த திட்டமிட்டு, ரெண்டு முறை தேதி அறிவிச்சு, மழை, வெள்ளத்தால தள்ளிவச்சுட்டாளே... ஒருவழியா வர்ற 21ம் தேதி மாநாடு நடக்க போறது ஓய்...
''உதயநிதி தான், இப்ப இளைஞர் அணி செயலரா இருக்கார்... அவரை, 'புரமோட்' பண்ற விதமா தான் இந்த மாநாட்டையே நடத்தறா ஓய்...
''பேருக்கு தான் இளைஞர் அணி மாநாடு... ஆனா, ஒட்டுமொத்த கட்சி நிர்வாகிகளுமே, இந்த மாநாட்டுக்காக ராப்பகலா உழைச்சுண்டு இருக்கா ஓய்...
''இந்த மாநாட்டுல, 'கட்சிக்காக கடுமையா உழைக்கற உதயநிதிக்கு, துணை முதல்வர் பதவி வழங்கணும்'னு தீர்மானம் கொண்டு வர இளைஞர் அணி நிர்வாகிகள் முடிவு பண்ணியிருக்கா... 'அனேகமா, இந்த மாத கடைசியில, முதல்வர் வெளிநாடு போறதுக்குள்ளயே வாரிசுக்கு பதவி உயர்வு குடுத்துடுவா'ன்னும் தி.மு.க., வட்டாரங்கள்ல பேசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்

