ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த மரியாதை: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த மரியாதை: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு
UPDATED : அக் 28, 2025 02:56 PM
ADDED : அக் 28, 2025 01:33 PM

கோவை: துணை ஜனாதிபதி பதவி என்பது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் கிடைத்த மரியாதை என துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா அரங்கில் தொழில் துறையினருடன் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில், சி.பி.ராதா கிருஷ்ணன் பேசியதாவது: எனது பொது வாழ்க்கையை நான் கோவையில்தான் தொடங்கினேன். இதை கூறுவதில் பெருமை கொள்கிறேன். நாடு உயர்ந்தால் தான் நாம் வளர முடியும். விவசாயம், தொழில்துறை இரண்டும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம்.
ஒரே நேரத்தில் முன்று மாநிலங்களுக்கு கவர்னராக பணியாற்றினேன். தொடர்ந்து மஹாராஷ்டிரா மாநில கவர்னராக பணியாற்றினேன். தற்போது துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்று உள்ளேன். முயற்சி நம்முடையது. முடிவு இறைவனுடையது என்றுதான் நான் பார்க்கிறேன்.
இந்த துணை ஜனாதிபதி என்பது எனக்கு கிடைத்த ஒரு மகத்தான மரியாதையாக நான் பார்க்கவில்லை. துணை ஜனாதிபதி பதவி எனக்குக் கிடைத்த தனிப்பட்ட மரியாதை அல்ல. உலகெங்கும் வாழும் ஒட்டுமொத்த தமிழினத்திற்கும், நம் கொங்கு மண்ணுக்கும், கோவை மாநகரத்திற்கும், கிடைத்த பெருமையாகவே கருதுகிறேன். கோவை விமான நிலையத்தின் வளர்ச்சிக்கு உதவுவேன். இவ்வாறு சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
உற்சாக வரவேற்பு
முன்னதாக, கோவை விமான நிலையத்தில், துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் அவரை பூங்கொத்து கொடுத்து தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார்.
விமான நிலையத்தில் நிருபர்களிடம் சிபி ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''உலகம் எங்கிலும் வாழும் தமிழ் பெருமக்களுக்கும், இந்த தமிழ் மண்ணுக்கும் என் பணிவான வணக்கங்கள்'', என்றார்.




