30 வயதுக்கு மேற்பட்டோருக்கு 'விழித்திரை காப்போம்' திட்டம் அரசு மருத்துவமனைகளில் அறிமுகம்
30 வயதுக்கு மேற்பட்டோருக்கு 'விழித்திரை காப்போம்' திட்டம் அரசு மருத்துவமனைகளில் அறிமுகம்
ADDED : செப் 19, 2026 01:58 AM

சென்னை: ''தமிழகத்தில், 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு, ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்யப்படும்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனையில், 'விழித்திரை காப்போம்' திட்டத்தை, அமைச்சர் அருண்ராஜ், நேற்று தொடங்கி வைத்தார்.
பின், அமைச்சர் அளித்த பேட்டி:
விழித்திரை காப்போம் திட்டம், நாட்டிலேயே முன்னோடி திட்டமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், ஆண்டுக்கு ஒருமுறை, 30 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் மற்றும் சர்க்கரை நோய், ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விழித்திரை பரிசோதனை செய்யப்படும்.
இதன் வாயிலாக, ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை செய்து, விழித்திரை மற்றும் பார்வையை பாதிக்கக்கூடிய நோயை கண்டறிந்து, தேவையான உயர் சிறப்பு சிகிச்சை வழங்க முடியும். பார்வை பாதிக்கக்கூடிய நோய்களில் இருந்து மக்களை பாதுகாக்க உதவும் இத்திட்டத்திற்கு, எழும்பூர் அரசு கண் மருத்துவமனை தலைமையகமாக செயல்படும்.
அனைத்து சர்க்கரை நோயாளிகளுக்கும் விழித்திரை பரிசோதனை கட்டாயமாக்கப்படுவது குறித்து, பொது மக்களின் கருத்துகளை கேட்டறிந்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
