ADDED : மார் 29, 2025 07:01 AM
சென்னை; ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று சென்னையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சார்பில், சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க துணைத் தலைவர் சித்திரைச் செல்வி தலைமை வகித்தார். கூட்டத்தில் பங்கேற்றவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டம் குறித்து, சித்திரைச்செல்வி கூறியதாவது:
சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு, குறைந்தபட்ச ஓய்வூதியம் 7,850 ரூபாய், அகவிலைப்படி, இலவச மருத்துவ காப்பீடு, குடும்ப நல நிதி, குடும்ப ஓய்வூதியம், மருத்துவ படி, ஈமச்சடங்கு தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும் என, அரசை வலியுறுத்தி வருகிறோம். இவற்றை வழங்குவதாக, சட்டசபை தேர்தலின்போது முதல்வர் வாக்குறுதி அளித்தார்.
ஆனால், ஆட்சி வந்து நான்கு ஆண்டுகளாகியும் நிறைவேற்றவில்லை. தற்போது, சட்டசபையில் தாக்கல் செய்த பட்ஜெட்டிலும், இது குறித்து அறிவிக்காமல் ஏமாற்றத்தை அளித்துள்ளார். எனவே, கோரிக்கையை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.