ADDED : நவ 13, 2026 07:01 PM

சென்னை: சென்னை மற்றும் கொல்கட்டா உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாக பதவி வகித்து ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணன், 71, உடல் நலக்குறைவு காரணமாக, இன்று (நவ.,13) காலமானார்.
எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னை, கொல்கட்டா உயர் நீதிமன்றங்களில் பணியாற்றிய நீதிபதி சி.எஸ்.கர்ணன், 2017ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி ஓய்வுபெற்றார். ஓய்வுக்கு பின், 2018ம் ஆண்டு அரசியல் கட்சியையும் தொடங்கினார்.
சென்னை சூளைமேடு, சவுராஷ்டிரா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த கர்ணன், அக்., 28ம் தேதி காய்ச்சல், மூச்சுத்திணறல், வலிப்பு ஏற்பட்டதால், ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை, மூளை பக்கவாதம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த கர்ணன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக, 2009ம் ஆண்டு மார்ச்சில் பதவியேற்றார். அப்போது, சக நீதிபதிகளுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.
பின், 2016ம் ஆண்டு மார்ச்சில், கொல்கட்டா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். நீதிபதிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை கூறியதால், அவருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ஹேகர் உள்ளிட்ட ஏழு நீதிபதிகளுக்கு எதிராக, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி கர்ணன் தீர்ப்பளித்தார்.
மறுநாள், அவருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஆறு மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது. கோவையில் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னாள் நீதிபதிகளுக்கு எதிராக அவதுாறு பரப்பியதாக, அவர் மீது, 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
