வருவாய் துறை அலுவலர்கள் தொடர் போராட்டம்: மக்கள் பணிகள் பாதிப்பு: அரசு பாராமுகம்
வருவாய் துறை அலுவலர்கள் தொடர் போராட்டம்: மக்கள் பணிகள் பாதிப்பு: அரசு பாராமுகம்
UPDATED : மார் 06, 2026 07:14 AM
ADDED : மார் 06, 2026 06:20 AM

சென்னை: 'பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்' என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை அலுவலர்கள், இரண்டாவது நாளாக, நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுதும் வருவாய் துறை அலுவலர்கள், கடந்த பிப்., 25ம் தேதி முதல், பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று 10ம் நாளாக, காத்திருப்பு போராட்டம் நடந்தது. தொடர்ந்து, இரண்டாம் நாளாக நேற்று, 50க்கும் மேற்பட்ட வருவாய் துறை அலுவலர்கள், பாரிமுனை, ராஜாஜி சாலையில் அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் வருவாய் துறையினர் போராட்டம் நடத்தி வருவதால், வரி வசூல், ஜாதி, வருமானம், இருப்பிட சான்றிதழ் வழங்கும் பணி, பட்டா மாற்றம் என, ஏராளமான பணிகள் நடக்காமல் உள்ளன. இதனால், மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து, அரசு கவலைப்படாமல், வருவாய் துறை அலுவலர்கள் போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை. இது போராட்டத்தில் ஈடுபட்டோரிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிராம உதவியாளர்கள்
தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், கிராம உதவியாளர்கள், தங்களுக்கு நான்காம் நிலைக்கு இணையான, காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, பிப்.,5 முதல், தமிழகம் முழுதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று சென்னை எழிலகம் வளாகத்திலிருந்து, 500க்கும் மேற்பட்ட, கிராம உதவியாளர்கள், கோட்டை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, கைது செய்தனர். மாலை விடுவிக்கப்பட்டனர்.
பேராசிரியர்கள்
பல்கலை மானியக்குழுவான, யு.ஜி.சி.,யின் பரிந்துரை அடிப்படையில், தமிழகத்தில் பல்கலை, கல்லுாரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கு, பணி மேம்பாட்டு ஊதியம் வழங்கப்படுகிறது.அதற்கான அரசாணை, தமிழக அரசின் சார்பில், 2021ல் வெளியிடப்பட்டது. கல்லுாரி பேராசிரியர்களுக்கு, பதவி மூப்பு அடிப்படையில், பணி மேம்பாட்டு ஊதியம் வழங்கப்படும்.அந்த வகையில், அரசு கல்லுாரி பேராசிரியர்களுக்கும், அரசு உதவி பெறும் கல்லுாரி பேராசிரியர்களில், கோவை, தஞ்சாவூர் மண்டலங்களை சேர்ந்தவர்களுக்கும், பணி மேம்பாட்டு ஊதியம் வழங்கப்பட்டது.
மற்ற பகுதிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், கடந்த நான்கு ஆண்டுகளாக, பணி மேம்பாட்டு ஊதியம் கோரி, தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கடந்த மாதம், கல்லுாரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கடந்த மாதம் 26ம் தேதி, சென்னை இணை இயக்குநரிடம், பணிமேம்பாட்டு ஊதிய அரசாணையை திரும்பி வழங்கி, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்நிலையில், பணி மேம்பாட்டு ஊதியம் கோரி, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கல்லுாரி கல்வி இயக்கக வளாகத்தில், பல்கலை ஆசிரியர்கள் சங்கம், மூட்டா சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று துவங்கியது. ஆண், பெண் பேராசிரியர்கள் ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என, பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

