ADDED : ஜன 05, 2024 05:34 AM

சென்னை: ''வடமாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, தென்மாநிலங்களில் ஏற்பட்ட வறட்சி மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பே அரிசி விலை உயர்வுக்கு காரணம்,'' என தமிழக அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் துளசிங்கம் கூறினார்.
சென்னையில், நேற்று அவர் கூறியதாவது: அரிசி விலை உயர்வு குறித்து, சில நாட்களாக அதிகளவில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இதற்கு விளக்கம் அளிக்கவேண்டிய பொறுப்பு உள்ளது.
இந்திய வேளாண் துறையின் கணக்கீட்டின்படி, 2023ல், 10.63 கோடி டன் அரிசி உற்பத்தி செய்யப்பட்டு உள்ளது. இது, 2022ம் ஆண்டை காட்டிலும், 3.7 சதவீதம் குறைவு. பருவநிலை மாற்றம், வடமாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பெருக்கு, கர்நாடகா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில் ஏற்பட்ட வறட்சி ஆகியவையே இதற்கு காரணம்.
உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாகவும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அரிசிக்கான தேவை அதிகரித்து உள்ளது. இதனால், சில மாதங்களாக இந்தியாவில் இருந்து பாஸ்மதி அல்லாத உயர் ரக பொன்னி, பாபட்லா, சோனா மசூரி ஆகிய ரகங்கள், பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது அதிகரித்து உள்ளது. இதுவே, அரிசி விலை உயர்வுக்கு பிரதான காரணங்கள்.
தமிழக அரிசி ஆலைகளுக்கான மின் கட்டணத்தை மின் வாரியம் உயர்த்தியுள்ளது. அரிசி ஆலைகள் அத்தியாவசிய உணவு பொருட்களை தயாரிப்பவை.
இது, வேளாண்மை மற்றும் பருவம் சார்ந்த தொழில்.எனவே, அரிசி ஆலைகளுக்கான மின் கட்டணத்தை பழைய அளவுக்கு குறைக்க வேண்டும். இதன்வாயிலாக தட்டுப்பாடு இல்லாமல் அரிசி வழங்க முடியும்.
மத்திய அரசு, 25 கிலோவிற்கு கீழ் பைகளில் அடைத்து விற்பனை செய்யும் அரிசிக்கு, 5 சதவீதம் ஜி.எஸ்.டி., வரியை விதித்துள்ளது. அரிசி, நம்நாட்டு மக்களின் அத்தியாவசிய உணவாகும்.
எனவே, இந்த வரியை பிரதமர் மோடி ரத்து செய்ய வேண்டும். இதன்வாயிலாக அரிசி விலை குறையும். வரும் காலங்களில், நெல் உற்பத்தி திருப்திகரமாக இருக்கும் என்பதால், அரிசி விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.