வெளி மாநில நெல் வரத்து அதிகரிப்பு: அரிசி விலை குறையும்
வெளி மாநில நெல் வரத்து அதிகரிப்பு: அரிசி விலை குறையும்
ADDED : ஜன 16, 2025 05:59 AM

கரூர் : நெல் விலை கடும் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்து வருவதால், அரிசி விலை குறைய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தஞ்சாவூரில் 3.20 லட்சம் ஏக்கர், திருவாரூரில் 3.62 லட்சம், நாகப்பட்டினத்தில் 1.20 லட்சம், மயிலாடுதுறையில் 1.83 லட்சம், கரூரில் 34,347 ஏக்கர் என மொத்தம், 10.19 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடந்து வருகிறது.
தற்போது நெல் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுஉள்ளனர். திருப்பூர், நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை பகுதிகளை சேர்ந்த நெல் வியாபாரிகள், நேரடியாக களத்துக்கு வந்து நெல் வாங்கி செல்கின்றனர். நெல் விலை சரிவால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தரம் குறைந்த நெல்
விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலர் சாமி.நடராஜன் கூறியதாவது: தொடர் மழையால் நெல் மகசூல் பாதிக்கப்பட்டுஉள்ளது. போதிய வெயில் இல்லாதது, ஈரப்பதம் மிக்க நெல் மற்றும் பூச்சி தாக்குதல் ஆகியவற்றால், தரம் குறைந்த நெல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதனால், வெளி மார்க்கெட்டில் நெல் விலை சரிவை சந்தித்துள்ளது.
கடந்த ஆண்டு ஆந்திரா பொன்னி எனும் பி.பி.டி., 5204 அரிசி, 60 கிலோ கொண்ட ஒரு மூட்டை, 1,500 லிருந்து, 1,800 ரூபாய் விலை போன நிலையில், இந்த ஆண்டு, 500 ரூபாய் விலை வீழ்ச்சியடைந்து, 1,200 முதல், 1,300 ரூபாய் விலை போகிறது.
கடந்த ஆண்டு கர்நாடகா பொன்னி எனும் ஜே.ஜி.எல்., ஒரு மூட்டை, 1,400 லிருந்து, 1,600 ரூபாய் வரை விற்ற நிலையில், 350 ரூபாய் விலை சரிந்து, 1,150 முதல், 1,250 ரூபாய்க்கு விற்கிறது. ஐ.ஆர்.20 போன்ற பொது ரக நெல் விலை ஒரு மூட்டை, 1,050 லிருந்து, 1,200 ரூபாய் வரை விலை போனது.
ஆனால், அரசு நெல் கொள்முதல் நிலையத்தில், சன்னரக நெல் ஒரு மூட்டை. 1,470 ரூபாய், பொதுரக நெல், 1,443 ரூபாய்க்கு வாங்கப்படுகிறது. இது, வெளிமார்க்கெட் விலையை விட கூடுதல் விலை என்பதால், இங்கு விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு கூறினார்.
எதிர்பார்ப்பு
இது குறித்து, அரிசி ஆலை உரிமையாளர் மற்றும் நெல் அரிசி வணிகர் சங்கங்களின் சம்மேளன மாநில செயலர் மோகன் கூறியதாவது: தமிழகத்தில் ஆண்டுதோறும், 91 லட்சம் டன் அரிசி தேவைப்படுகிறது. நடப்பு ஆண்டில், 70 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒடிசா, மே.வங்கம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் அபரிமிதமான நெல் உற்பத்தி உள்ளது.
இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக அரிசி உற்பத்தி, 120 முதல், 130 மில்லியன் டன். ஆனால், இந்தாண்டு, 137 மில்லியன் டன்உற்பத்தி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வரும் காலத்தில் தமிழகத்தில் அரிசி வரத்து அதிகரிக்கும் என்பதால், நெல் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே, பிப்ரவரி முதல் அரிசி விலை குறைய வாய்ப்பு அதிகம் உள்ளது. இவ்வாறு கூறினார்.