கல்வி உரிமை சட்ட நிதி விடுவிப்பு: மாணவர் இலவச சேர்க்கை துவக்கம்
கல்வி உரிமை சட்ட நிதி விடுவிப்பு: மாணவர் இலவச சேர்க்கை துவக்கம்
ADDED : அக் 03, 2025 12:09 AM

சென்னை: கட்டாய கல்வி உரிமை சட்ட நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளதால், தமிழகத்தில் இலவச மாணவர் சேர்க்கையை துவக்க உள்ளதாக, பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது.
தேசிய கல்வி கொள்கை , பி.எம்ஸ்ரீ., பள்ளி கொள்கையை தமிழகம் ஏற்காததால், தமிழகத்துக்கான கட்டாய கல்வி உரிமை சட்ட நிதியை மத்திய அரசு நி றுத்தி வைத்தது.
நீதிமன்ற உத்தரவு தேசிய கல்வி கொள்கை அறிமுகமாவதற்கு முன்பிருந்தே, கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை நடந்து வந்ததால், அந்த நிதியை தடைசெய்யக் கூடாது என, தமிழக அரசு வலியுறுத்தியது. இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவுகள் பிறப்பித்ததை தொடர்ந்து, மத்திய அரசு அந்த நிதியை விடுவித்துள்ளது.
இதையடுத்து, தமிழக அரசு, ஆர்.டி.இ., எனும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கையை துவக்கி உள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி துறை செயலர் சந்திரமோகன் வெளியிட்டு உள்ள அறிக்கை:
நடப்பு 2025 - 26ம் கல்வியாண்டுக்கான, ஆர்.டி.இ., எனும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, எல்.கே.ஜி., மற்றும் ஒன்றாம் வகுப்பில், சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக குழந்தைகளை சேர்க்கலாம்.
இதில் ஆதரவற்றோர், எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டோர், மாற்று பாலினத்தவர், துாய்மை பணியாளர், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
அவகாசம் ஒதுக்கீட்டை விட அதிகமானோர் விண்ணப்பித்தால், குலுக்கல் முறை பின்பற்றப்படும்.
அதன்படி, உரிய சான்றுகளுடன், வரும் 6ம் தேதி விண்ணப்பிக்கலாம்; நிரப்பப்பட்ட மாணவர் எண்ணிக்கை, 7ம் தேதி பதிவேற்றப்பட்டு, 'எமிஸ்' தளத்தில் 8ம் தேதி வெளியிடப்படும். மாணவர்களின் ஆதார், ஜாதிச் சான்றிதழ் உள்ளிட்ட விபரங்கள், 9ம் தேதி பதிவேற்றப்படும்.
தகுதி பெற்றவர்கள் விபரங்கள் வரும் 10ம் தேதி வெளியிடப்படும். தகுதியா னோரின் விடுபட்ட ஆவணங்களை சேர்க்க, 13ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும்; இறுதி பட்டியல் 14ம் தேதி வெளியிடப்படும்; எமிஸ் தளத்தில் உள்ளீடு செய்யப்பட்ட இறுதி பட்டியல், 15ம் தேதி வெளியிடப்பட்டு, கூடுதல் மாணவர்கள் இருந்தால் , 16ம் தேதி குலுக்கல் நடத்தப்படும்.
ஆர் .டி.இ., சட்டப்படி, மாணவர்களை சேர்க்க விரும்புவோர், rteadmission@tnschools.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கல்விக் கட்டணம் திரும்பப் பெறுதல் பற்றிய புகார்களுக்கு, 14417 என்ற தொலைபேசி எண்ணில் பெற்றோர் தொடர் பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.