தமிழகத்தில் நிலம் விலை அதிகரிப்பால் காற்றாலை முதலீட்டை ஈர்ப்பதில் சிக்கல்
தமிழகத்தில் நிலம் விலை அதிகரிப்பால் காற்றாலை முதலீட்டை ஈர்ப்பதில் சிக்கல்
ADDED : நவ 08, 2024 09:47 PM
சென்னை:தமிழகத்தில் நிலத்தின் விலை அதிகமாக இருப்பதால், காற்றாலை மின் திட்டங்களில் முதலீட்டை ஈர்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, குஜராத்தில் இருப்பது போல காற்றாலை மின் நிலையம் அமைக்க, தமிழகத்தில் தனி தொழில் பூங்கா ஏற்படுத்தி, குறைந்த விலைக்கு நிலம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு, முதலீட்டாளர்களிடம் எழுந்து உள்ளது.
காற்றாலை மின் நிலையம் அமைக்க, தமிழகம், குஜராத்தில் சாதகமான சூழல் நிலவுகிறது. தமிழகத்தில், 1 மெகா வாட் திறனில் காற்றாலை மின் நிலையம் அமைக்க, 4 ஏக்கர் நிலம் தேவை. நிலம், காற்றாலை மின் சாதனங்கள் என மொத்தம், 7 கோடி ரூபாய் செலவாகிறது.
கடந்த 2023 ஜனவரி நிலவரப்படி, நம் நாட்டில் காற்றாலை மின் நிலையம் நிறுவு திறனில், தமிழகம் 9,964 மெகா வாட் உடன் முதலிடத்தில் இருந்தது.
குஜராத் 9,918 மெகா வாட் என்ற அளவில் இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால், அதே ஆண்டு ஜூனில் குஜராத், 10,900 மெகா வாட்டை எட்டி, முதலிடம் பிடித்தது. தமிழகம், 10,150 மெகா வாட் திறனுடன் இரண்டாவது இடத்திற்கு சென்றது.
தற்போது தமிழகத்தில் 11,000 மெகா வாட் திறனிலும், குஜராத்தில் 12,200 மெகா வாட் திறனிலும் காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. தமிழகத்தில் இன்னும் 40,000 மெகா வாட் திறனில், நிலப்பகுதிகளில் காற்றாலை மின் நிலையம் அமைக்க வாய்ப்புள்ளது.
ஆனால், நிலத்தின் விலை மிக அதிகமாக உள்ளது. விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு நிலங்களை வாங்கி, காற்றாலை மின் நிலையம் அமைக்க வரும் நிறுவனங்களிடம், சிலர் பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.
இதனால், காற்றாலைகளில் முதலீடு செய்ய, முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். அதேசமயம், குஜராத்தில் காற்றாலை மின் நிலையம் அமைக்க, அரசு நிலங்கள் மேம்படுத்தப்பட்டு, குறைந்த விலைக்கு வழங்கப்படுகின்றன.
இது குறித்து, காற்றாலைகளை அதிகம் அமைத்துள்ள, தமிழக நுாற்பாலைகள் சங்க முதன்மை ஆலோசகர் கே.வெங்கடாசலம் கூறியதாவது:
தமிழகத்தில் 1 ஏக்கர் நிலம், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது. நிலத்தின் விலை அதிகமாக இருப்பது, முதலீட்டாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்துகிறது.
எனவே, அரசுக்கு சொந்தமான நிலங்களை மேம்படுத்தி, காற்றாலைக்கு என்று தனி தொழில் பூங்கா உருவாக்கி, அதிலுள்ள மனைகளை குறைந்த விலைக்கு விற்கலாம்; இல்லையெனில், நீண்ட கால குத்தகைக்கு வழங்கலாம்.
இது போன்ற நடைமுறை குஜராத்தில் உள்ளது. எனவே தான், காற்றாலை நிறுவு திறனில் அம்மாநிலம் முதலிடத்தில் உள்ளது. எனவே, தமிழக அரசும் குறைந்த விலைக்கு நிலம் ஒதுக்கினால், காற்றாலைகளில் அதிக முதலீடுகள் செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.