ADDED : மார் 12, 2024 09:10 PM
நொய்டா:நொய்டா 120வது செக்டார் 'அம்ரபாலி சோடியாக் சொசைட்டி' அடுக்குமாடி குடியிருப்பு அருகே, கடந்த 9ம் தேதி, ஐந்து கார்களில் கண்ணாடி உடைக்கப்பட்டு காருக்குள் இருந்த விலைமதிப்புள்ள பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டன.
இதுகுறித்து, 113வது செக்டார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். நேற்று முன்தினம் அதிகாலையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, அதிவேகமாக வந்த காரை நிறுத்தினர். ஆனால், அதற்குள் இருந்தவர்கள் போலீசை நோக்கி துப்பாகியால் சுட்டனர். போலீசாரும் பதிலடி கொடுத்தனர்.
காரை சுற்றி வளைத்த போலீசார், காருக்குள் இருந்த டில்லி மாதங்கிர் பகுதியைச் சேர்ந்த அமன், 28, மற்றும் அபிஷேக், 28, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
இருவரும் கார் கண்ணாடியை உடைத்து திருடும் 'தக்-தக்' கொள்ளைக் கும்பலை கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த 9ம் தேதி 120வது செக்டாரில் ஐந்து கார்களில் கைவரிசை காட்டியவர்கள் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து இரண்டு லேப்-டாப், ஒரு பைக் மற்றும் கைத்துப்பாக்கி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
காஜியாபாத் அருகே இந்திராபுரம், புதுடில்லி பஞ்சாபி பாக் ஆகிய இடங்களிலும் இதேபோன்று கார்களில் கைவரிசை காட்டியுள்ளனர்.
பஞ்சாபி பாக் போலீசில் அமன் மீது ஆறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

