வெள்ளை வண்ணத்தில் கொள்ளை அழகு; விஸ்வாசத்தின் மறுபெயர் ராஜபாளையம் நாய்கள்
வெள்ளை வண்ணத்தில் கொள்ளை அழகு; விஸ்வாசத்தின் மறுபெயர் ராஜபாளையம் நாய்கள்
ADDED : ஜன 16, 2024 12:53 AM

ராஜபாளையம் : வெள்ளை வண்ணத்தில் கொள்ளை அழகுடன் எஜமான விஸ்வாசத்தின் மறுபெயராக ராஜபாளையம் இன நாய்கள் உள்ளன.
நாய் வளர்ப்போரில் நாட்டு நாய் விரும்பிகளின் முதல் சாய்ஸ் ராஜபாளையம் இன நாய்கள் தான்.
அவற்றில் அப்படி என்ன சிறப்பு, சொல்கிறார் நாய் பண்ணை நடத்தி வரும் செல்வம்:
இந்திய அளவில் ஏழு வகை மட்டும் நாட்டு இன நாய்கள். அவற்றில் நான்கு தமிழகத்தைச் சேர்ந்தவை. ஊரின் பெயரால் அழைக்கப்படும் இந்த ராஜபாளையம் நாய் இனம் ஆசியாவில் ஒரே நிறத்தில் குட்டி போடும் ஐந்து வகைகளில் ஒன்று.
விஜய நகர பேரரசு ஆட்சியின் போது பாளையக்காரர்களால் ஆந்திர, கர்நாடக பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டு அங்கு இவ்வகை அழிந்து போய் ராஜபாளையத்தில் மட்டும் எஞ்சி உள்ளதால் ஊர் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.
கம்பீரமான தோற்றத்துடன் காது மடல்கள் மடங்கியும், உறுதியாக கால்கள், நெஞ்சுப் பகுதி சற்று ஏறி, வயிற்றுப் பகுதி இறங்கியும் உடல் முழுவதும் பால் வெள்ளை நிறத்திலும், மூக்கு, கால் பாதம், அடி வயிறு இளம் சிவப்பு நிறத்திலும் பார்ப்பதற்கு தனி அழகாகவும் மிடுக்காகவும் காணப்படும்.
தன்னை வளர்க்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் விசுவாசமாக நடந்து கொள்வது எளிதாக கட்டளைகளுக்கு அடிபணிவது இதன் தனிச்சிறப்பு.
இது ஒரு வேட்டை நாய் வகையாக இருப்பினும் அவற்றைக் காட்டிலும் மிகவும் வலுவான எலும்புகளை கொண்டது. வீட்டுக் காவலுக்கு இவை மிகச்சிறந்தது. வெளிநாட்டு இன நாய்களை போல பராமரிப்பிற்கு அதிக நேரம் செலவு இல்லாமல் நம் சீதோஷ்ண நிலைக்கு ஏற்றுக்கொள்ளும் வகையில் இயல்புடையது.
இதன் அருமை தெரிந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து ராஜபாளையம் இன நாய்களுக்கான தேடல்கள் அதிகரித்து வருகிறது. இருப்பினும் முறையான இனப்பெருக்கத்தினால் மட்டும் இவற்றின் தனித்தன்மை தொடர்ந்து வருகிறது.
வேறு நபர்களில் கலப்பின நாய்களை வாங்கி ஏமாறாமல் இருக்க வளர்ப்பவர்களிடம் நேரடியாக தொடர்பு கொண்டு மருத்துவ சான்றிதழ் மூலம் நாய்களின் ஆரம்பத்தை தெரிந்து வாங்கலாம்.
அரசு சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நாட்டின நாய்களின் உற்பத்திக்கு பாதுகாப்பு, கால்நடை மருத்துவ உதவி இதுவரை கிடைக்கவில்லை. கர்ப்பகால சிக்கல், எலும்பு முறிவு போன்ற அவசரத்திற்கு தனியார் கால்நடை மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள முடியாமல் பலரும் இவ்வகை நாய்களை கை விடுவதும் தொடர்கிறது. இவ்வாறு கூறினார்.
ராஜபாளையம் இன நாய்களை பாதுகாக்க அரசு டவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.