சிவன் கோவில் அருகே ராக்கெட் லாஞ்சர்: திருச்சியில் அதிர்ச்சி
சிவன் கோவில் அருகே ராக்கெட் லாஞ்சர்: திருச்சியில் அதிர்ச்சி
ADDED : அக் 30, 2024 07:24 PM

திருச்சி: திருச்சியில் சிவன் கோவில் குளம் அருகில் ராக்கெட் லாஞ்சர் கண்டெடுக்கப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சியை அடுத்துள்ளது அந்தநல்லுார். இங்கு பிரசித்தி பெற்ற சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சென்ற சிலர், குளம் அருகே பட்டாசு போன்ற பைப் உருவம் கொண்ட ஒன்று கிடப்பதை கண்டனர்.
முதலில் அதை ஏதோ வெடிகுண்டு என்று நினைத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஜீயபுரம் போலீசார் சென்று பார்த்தபோது, அது ராக்கெட் லாஞ்சர் என்பது தெரிந்தது. எப்படி அந்த இடத்துக்கு ராக்கெட் லாஞ்சர் வந்தது, யார் கொண்டு வந்திருப்பார்கள், அங்கே போடப்பட்ட அவசியம் என்ன என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.
சமீபத்தில் தான் வந்திருக்குமா, சில பல ஆண்டுகளுக்கு முன் புதைத்து வைக்கப்பட்டு, தோண்டியதால் இப்போது வெளியில் தென்பட்டதா என்றும் பல கோணங்களில் போலீசார் விசாரிக்கின்றனர்.
சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருக்கும் சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் ஏதாவது துப்பு கிடைக்குமா என்று போலீசார் தேடி வருகின்றனர்.

