ஆட்சியில் பங்கு; அதிகாரப்பகிர்வு காங்கிரஸ் வரவேற்பு: செல்வப்பெருந்தகை
ஆட்சியில் பங்கு; அதிகாரப்பகிர்வு காங்கிரஸ் வரவேற்பு: செல்வப்பெருந்தகை
ADDED : நவ 02, 2024 12:42 AM

சென்னை: ''காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை நோக்கித்தான் எங்கள் பயணம் இருக்கும். ஆட்சியில் பங்கு, அதிகாரப் பகிர்வு என்கிற முடிவை வரவேற்கிறோம்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்டமைப்பை வலுப்படுத்த, வரும் 5ம் தேதி முதல் கிராம கமிட்டிகள் சீரமைப்பு பணிகள் துவங்குகின்றன; டிச., 15க்குள் முடியும். அதைத் தொடர்ந்து, 'கிராம தரிசனம்' என்ற பெயரில், கிராமங்கள் நோக்கி செல்கிறோம்.
எங்கள் தலைவர்கள் கிராம மக்களுடன் தங்கி பணியாற்றுவர். கட்சி வலிமையாக இருந்து, கிராமங்களில் உயிரோட்டமாக இருந்தால் தான், பிற கட்சிகள் எங்களை தேடி வரும்.
தற்போது, ஆட்சியில் பங்கு, அதிகாரப் பகிர்வு பற்றிய பேச்சு எழுந்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். எங்களை பொறுத்தவரை கூட்டணி முடிவு எடுக்க வேண்டியது டில்லி மேலிடம் தான். இப்போது, 'இண்டியா' கூட்டணியில் இருக்கிறோம். கடந்த 2006 சட்டசபை தேர்தலுக்குப் பின், தி.மு.க., ஆட்சி அமைக்க, சோனியா பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுத்தார்.
இப்போது, தொண்டர்களின் உணர்வுகளை கட்சி தலைமைக்கு கொண்டு செல்வோம். விஜய்யின் அரசியல் வருகை, 'இண்டியா' கூட்டணி வெற்றிக்கு உதவியாக இருக்கும்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி உருவாக வேண்டும் என்பதை நோக்கித்தான் எங்கள் பயணம் இருக்கும். கூட்டணியில் எந்த சலனமும் சங்கடமும் இல்லை. தமிழகத்தில் தை பிறந்தவுடன் காங்கிரஸ் கட்சிக்கு வழி பிறக்கும்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் முறையை மத்திய அரசு அமல்படுத்தினால், நாட்டில் புரட்சி ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.