மேற்கூரை சூரியசக்தி மின்சாரம் 1,000 மெகா வாட்டை தாண்டியது
மேற்கூரை சூரியசக்தி மின்சாரம் 1,000 மெகா வாட்டை தாண்டியது
ADDED : ஜூன் 09, 2025 01:58 AM

சென்னை: தமிழகத்தில் வீடு, கல்வி நிறுவனம் போன்றவற்றில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க பலரும் ஆர்வம் காட்டி வருவதால், தற்போது அந்த மின் நிலையங்களின் நிறுவு திறன், 1,000 மெகாவாட்டை தாண்டிஉள்ளது.
தமிழகத்தில் ஆண்டுக்கு, 300 நாட்களுக்கு மேலாக சூரியசக்தி மின்சாரம் கிடைக்கும் சாதகமான சூழல் உள்ளது. இதனால், பெரிய நிறுவனங்கள், அதிக திறனில் சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்கின்றன.
இதுதவிர வீடு, கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றில், 'ரூப் டாப் சோலார்' எனப்படும் குறைந்த திறனில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தில், உரிமையாளர் பயன்படுத்தியது போக, மீதியை மின் வாரியத்திற்கு விற்கலாம்.
நாடு முழுதும் வீடுகளில், பிரதமர் சூரிய வீடு இலவச மின் திட்டத்தை, 2024ல் மத்திய அரசு துவக்கியது.
இத்திட்டத்தின் கீழ், ௧ கிலோ வாட் திறனில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, 30,000 ரூபாயும், 2 கிலோ வாட்டிற்கு, 60,000 ரூபாயும், அதற்கு மேல், 78,000 ரூபாயும் மானியம் வழங்கப்படுகிறது. இதனால், பலரும் மின் நிலையம் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இதையடுத்து, தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களின் நிறுவு திறன், 1,024 மெகாவாட்டாக உள்ளது. இவற்றை, 77,398 பேர் அமைத்துள்ளனர்.