தென்சென்னையை கலக்கிய ரவுடி 'சிடி' மணி சேலத்தில் துப்பாக்கி முனையில் கைது
தென்சென்னையை கலக்கிய ரவுடி 'சிடி' மணி சேலத்தில் துப்பாக்கி முனையில் கைது
ADDED : செப் 23, 2024 01:47 AM

சென்னை: தென்சென்னையை ஆட்டிப்படைத்து வந்த ரவுடி, 'சிடி' மணி, சேலத்தில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார்.
சென்னை தேனாம்பேட்டை தாமஸ் சாலையை சேரந்தவர் மணிகண்டன், 44; ரவுடி. இவர், 2005ல், தி.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடைபாதைகளில், 'சிடி' வியாபாரம் செய்து வந்தார். அதனால், 'சிடி' மணி என, அழைக்கப்படுகிறார்.
துவக்கத்தில், திருட்டு, செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த மணிக்கு, ரவுடி திண்டுக்கல் பாண்டியனின் நட்பு கிடைத்தது. இவரை, போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற பின், மணி தனியாக நவீன ரக துப்பாக்கி, வெடிகுண்டு சகிதம், தொழில் வர்த்தகர்களை மிரட்டி பணம் பறிக்கத் துவங்கினார்.
அதேநேரத்தில், திண்டுக்கல் பாண்டியின் கூட்டாளிகள், மணிக்கு எதிராக தொழில் செய்யத் துவங்கினர். இதனால், யார் பெரியவர் என்ற மோதல் உருவாகி, 2007ல் தேனாம்பேட்டையில் வெங்கடா என்பவரை மணி தீர்த்துக் கட்டினார்.
மணி மீது, 10 கொலைகள் உட்பட, 32 வழக்குகள் உள்ளன. ஐந்து முறை குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைதாகியுள்ளார். இவரும், இரு தினங்களுக்கு முன், சென்னை வியாசர்பாடியில் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட காக்கா தோப்பு பாலாஜியும் நெருங்கிய நண்பர்கள்.
இவர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்பவம் செந்திலுக்கும் ஏழாம் பொருத்தம்.
கடந்த, 2020 மார்ச், 3ல், சென்னை அண்ணா சாலையில், ஒரே காரில் காக்கா தோப்பு பாலாஜியும், மணியும் சென்ற போது, தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகே, சம்பவம் செந்திலின் கூட்டாளிகள் வெடிகுண்டு வீசி கொல்ல முயன்றனர்.
அப்போது, ரூட்டை மாற்றி இருவரும் தப்பினர். இச்சம்பவத்திற்கு பின், நண்பர்கள் வாயிலாக, 'பி.எம்.டபிள்யூ புல்லட் புரூப்' காரை வாங்கி, மணி பயன்படுத்தி வந்தார்.
இவரை, 2021ல், போரூர் மேம்பாலம் அருகே போலீசார் மடக்கினர். அப்போது, எஸ்.ஐ., பாலகிருஷ்ணன் என்பவரை, மணி துப்பாக்கியால் சுட்டார். எஸ்.ஐ.,க்கு இடது தோள் பகுதியில் காயம் ஏற்பட்டது. அத்துடன், மணி ஓட்டிச்சென்ற கார் பாலத்தின் மீது மோதியதில், அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு போலீசாரிடம் சிக்கினார். போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளியே வந்த பின், 2023ல் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
இரண்டு மாதங்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்த மணி, சேலத்தில் பதுங்கி இருப்பதாக, சென்னை மாநகர அதி தீவிர குற்றத் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது.
தனிப்படை போலீசார், சேலத்தில் நேற்று துப்பாக்கி முனையில் மணியை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனர். அவரிடம் இருந்து, புல்லட் புரூப் கார் மற்றும் நவீன ரக துப்பாக்கியை பறிமுதல் செய்துள்ளனர்.
இதற்கிடையில், மணியின் தந்தை பார்த்தசாரதி, தன் மகன் மனம் திருந்தி வாழ்ந்து வரும் நிலையில், போலீசார் கைது செய்து இருப்பதாகவும், மகனின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.