நீதிபதி முன்பு காலணி வீச முயற்சி: ரவுடியால் நீதிமன்றத்தில் பரபரப்பு
நீதிபதி முன்பு காலணி வீச முயற்சி: ரவுடியால் நீதிமன்றத்தில் பரபரப்பு
ADDED : நவ 13, 2025 02:58 PM

சென்னை: கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ரவுடி கருக்கா வினோத், மற்றொரு வழக்கில் சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜரான போது நீதிபதி மீது காலணியை வீச முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நீதிபதி மீது இவன் காலணி வீச முயல்வது இது இரண்டாவது முறையாகும்.
கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை மீது, கடந்த 2023ல் அடுத்தடுத்து இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசிய ரவுடி கருக்கா வினோத், 42, என்பவனை, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மடக்கி பிடித்து, கிண்டி போலீசாரிடம் ஒப்படைத்தனர். கிண்டி போலீசார் அவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால், இவ்வழக்கு, தேசிய புலனாய்வு சிறப்பு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இதையடுத்து என்.ஐ.ஏ., அதிகாரிகள், கருக்கா வினோத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இவ்வழக்கு, பூந்தமல்லியில் உள்ள தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மலர்விழி முன் நடந்தது.
விசாரணை முடிந்த நிலையில், கருக்கா வினோத் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டதால், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5,000 ரூபாய் அபராதமும் விதித்து நேற்று நீதிபதி தீர்ப்பளித்தார். அபராதம் கட்ட தவறினால், மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், நீதிபதி மலர்விழி தீர்ப்பு வழங்கினார்.
இதையடுத்து, கருக்கா வினோத்தை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் என்.ஐ.ஏ., அதிகாரிகள், புழல் சிறைக்கு அழைத்து சென்றனர்.ஏற்கனவே, வழக்கு விசாரணையின் போது, கருக்கா வினோத் நீதிபதியின் மீது காலணியை வீசி தகராறில் ஈடுபட்டதும், அதன்பிறகு இந்த வழக்கின் விசாரணை 'வீடியோ கான்பிரன்ஸ்' மூலம் நடத்தப்பட்டு வந்தது.
இந்நிலையில் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்தை போலீசார் சென்னை 6வது கூடுதல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, கவர்னர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தனக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதாக கூறி கோஷமிட்ட ரவுடி, நீதிபதி மீது காலணியை வீச முயன்றார். அப்போது அங்கிருந்த போலீசார் அவனை பிடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனையடுத்து, இதுபோன்ற குற்றவாளிகளை வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

