1 ஏக்கர் இன்றி ரூ.10 கோடி முடக்கம்: தென்னை நார் சோதனை மையத்திற்கு பெரும் 'சோதனை'
1 ஏக்கர் இன்றி ரூ.10 கோடி முடக்கம்: தென்னை நார் சோதனை மையத்திற்கு பெரும் 'சோதனை'
ADDED : நவ 11, 2025 11:43 PM
- நமது நிருபர் -
தென்னை நாரில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிப்பதற்கான சோதனை மேற்கொள்ள, வடிவமைப்பு மேம்பாட்டு மையம் அமைக்க, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் இடம் வழங்க, கோவை மாவட்ட நிர்வாகம் அலைக்கழிப்பு செய்கிறது. இதனால், அந்த மையம் அமைக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தேங்காய் மட்டையில் இருந்து தென்னை நார், தென்னை நார் துகள் பிரித்து எடுக்கப்படுகிறது. அவற்றில் இருந்து தரை விரிப்பு, மிதியடி உட்பட பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
தமிழகத்தில் தேங்காய் விளைச்சல் அதிகம் உள்ள நிலையில், அதற்கு ஏற்ப, தென்னை நார் அதிகம் கிடைக்கிறது. ஆனால், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது, 20 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. மீதமுள்ள, 80 சதவீதம் சீனா உட்பட, பல நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
அந்நாடுகள், தென்னை நாரில் மிதியடி, தரைவிரிப்பு என, வழக்கமான பொருட்கள் மட்டுமின்றி, நீர்நிலைகளின் கரையை பலப்படுத்தும் புவி விரிப்பு , தென்னை நாரை இழை போல் உருவாக்கி, 'பேக்கிங்' பொருள் என, பல் வேறு மதிப்பு கூட்டப் பட்ட பொருட் களை தயாரிக்கிறது.
தேவை அதிகரிப்பு
சுற்றுச்சூழல் பாதிப்பதில்லை என்பதால், தென்னை நார் பொருட்களுக்கு, உலகம் முழுதும் தேவை அதிகரித்து வருகிறது. எனவே, தமிழகத்தில் தென்னை நாரில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பை ஊக்குவிக்கும் பணியில், சிறு, குறு, நடுத்தர தொழில் துறையின் கீழ் செயல்படும் தமிழக கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இப்பொருட்கள் தயாரிப்புக்கான சோதனையில் ஈடுபட, உற்பத்தி வடிவமைப்பு மேம்பாட்டு மையம் அமைக்க அரசு, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.
இந்த மையத்தில், அதிநவீன கருவிகள், கணினி மென்பொருள் இடம்பெறும். அதை பயன்படுத்தி, புதிய தயாரிப்புக்கான சோதனையில் ஈடுபடலாம்; பின், உற்பத்தியில் ஈடுபடலாம்.
இதனால், தொழில் முனைவோருக்கு சோதனை செலவு குறைந்து, தேவையுள்ள பொருட்களை தயாரித்து விற்கலாம். கோவையில் தென்னை விளைச்சல் அதிகம் உள்ளது. எனவே, தமிழகம் முழுதும் உள்ள தொழில் முனைவோர் எளிதாக வந்து செல்லும் வகையில், கோவையில், வடிவமைப்பு மேம்பாட்டு மையம் அமைக்க திட்டமிடப்பட்டது.
அலைக்கழிப்பு
இதற்காக, பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு ஆகிய தாலுகாக்களில், ஒரு ஏக்கர் நிலம் வழங்குமாறு, கோவை மாவட்ட நிர்வாகத்திடம், சிறு, குறு, நடுத்தர தொழில் துறை சார்பில் கேட்கப்பட்டது.
மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் இடம் வழங்காமல் அலைக்கழிப்பு செய்யப்படுகிறது. இதனால், தாமதம் ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் வசதி படைத்த பலர், பல நுாறு ஏக்கரில் தென்னை சாகுபடி செய்கின்றனர். அவர்கள் தங்களுக்கு உரிய இடத்தில், 1 ஏக்கர் நிலம் வழங்கினால், அங்கு சோதனை மையம் அமைப்பதுடன், அதற்கு இடம் வழங்குவோரின் பெயரை வைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.

