'அப்பா மதுபான கடையில் ரூ.1,000 கோடி ஊழல்'; டாஸ்மாக் கடைகள் முன் ஸ்டிக்கர் ஒட்டிய பா.ஜ.,
'அப்பா மதுபான கடையில் ரூ.1,000 கோடி ஊழல்'; டாஸ்மாக் கடைகள் முன் ஸ்டிக்கர் ஒட்டிய பா.ஜ.,
ADDED : மார் 20, 2025 05:27 AM

வெண்ணந்துார்: 'அப்பா மதுபான கடையில் ரூ.1,000 கோடி ஊழல்' என்ற ஸ்டிக்கரை, டாஸ்மாக் மதுபான கடை சுவரில் பா.ஜ.,வினர் ஒட்டி சென்றனர்.
தமிழக அரசின் 'டாஸ்மாக்' நிறுவனத்திற்கு, மாநிலம் முழுதும் 4,830 சில்லரை மதுபான விற்பனை கடைகள் உள்ளன.
இக்கடைகளுக்கு, தி.மு.க., முக்கிய புள்ளிகள் நடத்தி வரும் ஆலைகளில் இருந்து மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன.
இவற்றில் குறிப்பிட்ட ஆலைகளில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், 1,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருப்பதாகவும், அதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
கிழித்து அகற்றம்
இதையடுத்து, சென்னையில் உள்ள அரசு மதுபான ஆலை தலைமை அலுவலகத்தை, பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை, கடந்த 17ல் முற்றுகையிட முயன்றார். அவரை போலீசார் தடுத்து கைது செய்தனர்.
அப்போது அவர், 'இனி தமிழகத்தில் காவல் துறையினரை துாங்கவே விட மாட்டோம்; ஒவ்வொரு மதுபான கடை முன், மதுபான ஊழல் குறித்து, முதல்வர் ஸ்டாலின் படத்துடன் கூடிய போட்டோ ஒட்டப்படும்' என, அறிவித்தார்.
அதன்படி, நேற்று நாமக்கல் மாவட்டம், வெண்ணந்துார் பகுதியில் பா.ஜ., சார்பில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. மாலையில் அந்த ஸ்டிக்கரை டாஸ்மாக் ஊழியர்கள் கிழித்து அகற்றினர்.
போலீஸ் பாதுகாப்பு
இதே போல, தமிழகத்தின் பல இடங்களிலும் பா.ஜ.,வினர், டாஸ்மாக் கடைகள் முன் ஸ்டிக்கர் மற்றும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
இதையடுத்து, தமிழகம் முழுதும் டாஸ்மாக் கடைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போட, டி.ஜி.பி., அலுவலகத்தில் இருந்து உத்தரவு பறந்துள்ளது.
இதற்கிடையில், பா.ஜ.,வுக்கு போட்டியாக தி.மு.க.,வைச் சேர்ந்தோரும் களம் இறங்கி உள்ளனர்.
'சங்கிகள் கவனத்துக்கு' என தலைப்பிட்டு, அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொள்ளும் படத்துடன், 'இக்கடையில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வதில்லை' என, அச்சிடப்பட்ட போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.