நெல் இருப்பை குறைத்து காண்பித்து ரூ.10.84 கோடி முறைகேடு
நெல் இருப்பை குறைத்து காண்பித்து ரூ.10.84 கோடி முறைகேடு
UPDATED : நவ 29, 2026 08:00 PM
ADDED : நவ 29, 2026 08:00 PM
சென்னை: நெல் அரவை ஆலைகளில், இருப்பை குறைத்து காட்டி, தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தில், 10.84 கோடி ரூபாய் முறைகேடு செய்தது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முதல் தகவல் அறிக்கையில், அவர்கள் கூறியிருப்பதாவது:
தமிழக நுகர்பொருள் வாணிப கழகத்தில், காஞ்சிபுரம் மண்டல மேலாளராக பணிபுரிந்த அருள் வனிதா, தரக்கட்டுப்பாடு உதவி மேலாளராக பணிபுரிந்த ஜெயவேலு ஆகியோர், தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள், காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் வெங்கடேஸ்வரா நவீன அரிசி ஆலை உரிமையாளர் தாஸ்; மகாலட்சுமி நவீன அரிசி ஆலை உரிமையாளர் பாலாமணி; சிறுகாவேரிப்பாக்கம் சிவசூரி அரிசி ஆலை உரிமையாளர் பழனி; ‘பைன் ரைஸ் அக்ரோ புட்ஸ்’ என்ற, நவீன அரிசி ஆலையின் பங்குதாரர்கள் கருணாநிதி, அழகரசன் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, கொள்முதல் செய்யப்பட்ட, 1,792 டன் நெல்லின் இருப்பை குறைத்து காட்டி, 10.84 கோடி ரூபாய் முறைகேடு செய்தது தெரிய வந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இவ்வழக்கின் அடிப்படையில், சில தினங்களுக்கு முன், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில், அருள் வனிதா, ஜெயவேல் வீடு உட்பட, 11 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
