'டிஜிட்டல் அரெஸ்ட்' மிரட்டல் விடுத்து தமிழகத்தில் ரூ.1,100 கோடி சுருட்டல்
'டிஜிட்டல் அரெஸ்ட்' மிரட்டல் விடுத்து தமிழகத்தில் ரூ.1,100 கோடி சுருட்டல்
UPDATED : அக் 01, 2024 04:17 PM
ADDED : அக் 01, 2024 02:53 AM

சென்னை : தமிழகத்தில் ஒன்பது மாதங்களில், 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்திருப்பதாக மிரட்டல் விடுத்து, சைபர் குற்றவாளிகள், 1,100 கோடி ரூபாய் வரை சுருட்டி உள்ளனர்.
இணையவழியில் பண மோசடியில் ஈடுபட்டு வரும் சைபர் குற்றவாளிகள், 'உங்கள் மொபைல் போன் எண் சட்ட விரோத பண பரிமாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. பயங்கரவாதிகளை நீங்கள் தொடர்பு கொண்டுள்ளீர்கள். நீங்கள் வெளிநாட்டிற்கு அனுப்பிய பார்சலில் போதை பொருள் உள்ளது.
பண மோசடி
'உங்களை டிஜிட்டல் முறையில், அரெஸ்ட் செய்துள்ளோம். இதுபற்றி, உறவினர், நண்பர்களுக்கு தகவல் தெரிவிக்கக் கூடாது. மீறினால், உங்கள் வீட்டிற்கு சி.பி.ஐ., அதிகாரிகள் வருவர்' என, மிரட்டல் விடுத்து, பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தமிழகத்தை சேர்ந்தவர்களிடம், செப்டம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், 1,100 கோடி ரூபாயை சுருட்டி உள்ளனர்.
இதுகுறித்து, சென்னையில், சைபர் சொசைட்டி ஆப் இந்தியா அமைப்பினர் நடத்திய கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்ற, மாநில சைபர் குற்றத்தடுப்பு பிரிவு டி.எஸ்.பி., ஸ்ரீலிசா ஸ்டெபிலா தெரஸ் கூறியதாவது:
சைபர் குற்றவாளிகள், தற்போது டிஜிட்டல் அரெஸ்ட் என்ற உத்தியை கையாண்டு வருகின்றனர். யாரோ ஒரு நபர், எங்கிருந்தோ சி.பி.ஐ., அதிகாரி போல பேசி, செய்யாத குற்றத்தை மக்கள் மீது சுமத்தி, பண மோசடி செய்கிறார்.
அவர் எவ்வளவு பெரிய ஆளாக வேண்டுமென்றாலும் இருக்கட்டும். செய்யாத குற்றத்திற்கு நாம் ஏன் பணம் அனுப்ப வேண்டும் என, மக்கள் சிந்திக்க வேண்டும். குற்றம் செய்த நபரையே, போலீசார் கைது செய்ய ஏகப்பட்ட நடைமுறைகள் உள்ளன.
'சிம் கார்டு'
அப்படி இருக்கும் போது, டிஜிட்டல் அரெஸ்ட் என்றவுடன் பணம் அனுப்பவது சரியல்ல. அப்படி ஒரு நாளும் யாரையும் கைது செய்ய முடியாது.
டிஜிட்டல் அரெஸ்ட் வாயிலாக, மக்களிடம் மோசடி செய்த, 1,100 கோடி ரூபாயில், 550 கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டுள்ளது.
சைபர் குற்றங்கள் குறித்து, www.cybercrime.gov.in என்ற இணையதளத்திற்கு உடனடியாக புகார் தெரிவியுங்கள்.
ஏனென்றால், இந்த இணையத்தில் வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன. புகார் பதிவு செய்யும் போதே, சம்பந்தப்பட்ட வங்கிக்கு தகவல் சென்று விடும். பணத்தையும் முடக்கி விடலாம்.
அதேபோல, சைபர் குற்றவாளிகளிடம் பணத்தை இழக்கவில்லை என்றாலும், அவர்கள் மோசடிக்கு முயற்சி செய்து இருந்தாலும் புகார் பதிவு செய்ய வேண்டும்.
இதனால், மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்க உதவியாக இருக்கும். நாங்கள் புகார் வந்த உடனே, சைபர் குற்றவாளிகள் பயன்படுத்திய, 'சிம் கார்டு'களை முடக்கி விடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.