கோவில்களில் ரூ.1,153 கோடி கொள்ளை; ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தகவல்
கோவில்களில் ரூ.1,153 கோடி கொள்ளை; ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் தகவல்
ADDED : டிச 03, 2024 04:03 AM

ஈரோடு : ''அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., ஆட்சிகளில், வரி என்ற பெயரில், தமிழக கோவில்களில் இருந்து, மூன்றாண்டுகளில், 1,153 கோடி ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது,'' என, ஓய்வுபெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல் கூறினார்.
ஈரோடு ஆருதர் கபாலீஸ்வரர் கோவிலில், ஓய்வுபெற்ற ஐ.ஜி., பொன் மாணிக்கவேல், நேற்று தரிசனம் செய்தார். பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஈரோட்டின் புராதனமான ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவிலின் தொன்மை அழிக்கப்பட்டுள்ளது. கருவறையை சுற்றியிருந்த பழமையான சிலைகள் திருடப்பட்டு புதிதாக வைத்துள்ளனர். கடந்த ஆண்டு தமிழகத்துக்கு வந்த பிரதமர், கோவில் சொத்து கொள்ளை அடிக்கப்படுவதாக சொன்னதை உறுதிப்படுத்தும் வகையில், ஆருத்ரா கபாலீஸ்வரர் கோவிலில் மோசடி நிகழ்ந்துள்ளது.
கடந்த ஆட்சி, இந்த ஆட்சி என இரண்டு ஆட்சியிலும், கோவிலுக்கு வரி போடுவது மட்டுமின்றி, கோவில் கணக்கை தணிக்கை செய்வதாக காண்பித்து, 2018ல், 327 கோடி ரூபாய், 2019ல், 348 கோடி, 2021ல், 478 கோடி ரூபாயை வரியாக எடுத்துள்ளனர். தற்போது தமிழக ஹிந்து கோவில்களில் இருந்து, 656 கோடி ரூபாய் வரியாக எடுக்கப்படுகிறது. அதாவது மாதந்தோறும், 56 கோடி ரூபாய் வரி போடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.