UPDATED : நவ 28, 2026 09:54 PM
ADDED : நவ 28, 2026 09:54 PM
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே, 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா கடத்தி வந்த ரங்கநாதன், 32, கண்ணதாசன், 33, ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், செங்கம் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூருவிலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர்.
அதில், 3 டன் எடையுள்ள, 15 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். மேலும், மினி லாரியில் இருந்தவர்களை பிடித்து விசாரணை செய்ததில், கள்ளக்குறிச்சியை சேர்ந்த ரங்கநாதன், பெரம்பலுாரை சேர்ந்த கண்ணதாசன் என்பது தெரிந்தது.
மேலும், பெங்களூருவிலிருந்து பெரம்பலுாருக்கு குட்கா பொருட்கள் கடத்தி சென்றதும் தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், குட்காவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
