ADDED : மே 15, 2025 02:03 AM
சென்னை:பொது மக்கள் பங்கேற்புடன், பொது சொத்துக்கள் உருவாக்குவதை ஊக்குவிக்கும் வகையில், நமக்கு நாமே திட்டத்தை ஊரக வளர்ச்சி துறை செயல்படுத்தி வருகிறது.
இதற்கு ஒதுக்கப்படும் நிதியில், மூன்றில் ஒரு பங்கை பொதுமக்கள், தனியார் அமைப்புகள் வழங்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ், அரசு பள்ளி வகுப்பறை, ஆய்வகம், சுற்றுச்சுவர், சமையல் கூடம் கட்டுதல், அரசு கல்லுாரிகள், பாலிடெக்னிக் கல்லுாரிகளில் உள்விளையாட்டு அரங்கங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரேஷன் கடைகள், நுாலகங்கள், சத்துணவு மையங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படுகின்றன.
இத்திட்டத்திற்கு ஆண்டு தோறும், 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. நடப்பாண்டு 150 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான உத்தரவை, ஊரக வளர்ச்சி துறை செயலர் ககன்தீப் சிங் பேடி பிறப்பித்துள்ளார்.