ADDED : பிப் 23, 2024 02:39 AM
கும்பகோணம்: கோவில் கும்பாபிஷேகத்திற்காக, காரில் வைத்திருந்த 17 லட்சம் ரூபாயை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கோவிந்தபுரத்தில், விட்டல் ருக்மணி சமஸ்தான கோவிலில் மேனேஜராக பணியாற்றுபவர் சந்திரசேகரன், 48. இவர் நேற்று கோவில் கும்பாபிஷேகத்திற்காக, கும்பகோணத்தில் உள்ள இரண்டு வங்கிகளில் இருந்து 17 லட்சம் ரூபாயை எடுத்து காரில் பாதுகாப்பாக வைத்தார்.
பின், கும்பகோணம் மடத்துத் தெருவில் உள்ள காபித்துாள் கடைக்குச் சென்று, காபித் துாள் வாங்கிக் கொண்டு காரில் ஏறிய போது, 17 லட்சம் ரூபாய் பணம் வைத்திருந்த பை திருடப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார்.
இது குறித்து, உடனே, கும்பகோணம் கிழக்கு போலீசில், சந்திரசேகரன் புகார் அளித்தார். சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு போலீசார் விசாரிக்கின்றனர்.