ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு; சிறப்பு எஸ்.ஐ., தலைமறைவு
ரூ.20 லட்சம் வழிப்பறி வழக்கு; சிறப்பு எஸ்.ஐ., தலைமறைவு
ADDED : ஜன 09, 2025 01:52 AM

சென்னை: வருமான வரித் துறை அதிகாரிகளுடன் கூட்டு சேர்ந்து, 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் தேடப்பட்டு வரும், சென்னை சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ., சன்னி லாய்டு தலைமறைவாகி விட்டார்.
கடந்தாண்டு, டிச., 16ம் தேதி இரவு, திருப்பத்துார் மாவட்டத்தை சேர்ந்தவரை காரில் கடத்தி, 20 லட்சம் ரூபாய் பறித்த வழக்கில், திருவல்லிக்கேணி காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ., ராஜாசிங், 48 மற்றும் அவரது கூட்டாளிகளான, வருமான வரித் துறை கண்காணிப்பாளர் பிரபு, 31; ஆய்வாளர் தாமோதரன், 41, ஊழியர் பிரதீப், 42, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இச்சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட, சென்னை, சைதாப்பேட்டை காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ., சன்னி லாய்டு மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசார் தன்னை நெருங்கி விட்டதை அறிந்த சன்னி லாய்டு தலைமறைவாகி விட்டார். அவரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
போலீசார் கூறியதாவது:
கடந்த 2019ல், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தலைமை காவலராக சன்னி லாய்டு பணிபுரிந்தார்.
அப்போது, தலைமை காவலர் அசோக்குமார், சிறப்பு எஸ்.ஐ., ராஜசேகரன் ஆகியோருடன் சென்று, திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் சோதனை நடத்தினர்.
அங்கு தங்கியிருந்த கடத்தல் கும்பலிடம் ஏராளமான மடிக்கணினிகளை பறிமுதல் செய்தனர்.
அவர்களை கைது செய்யாமல் இருக்க, சன்னி லாய்டு உள்ளிட்டோருக்கு பல லட்சம் ரூபாய் கைமாறி உள்ளது. இதனால், அப்போதே மூவரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.
ராஜாசிங், சன்னி லாய்டு, வருமான வரி அதிகாரிகள் கூட்டணி, ஹவாலா கும்பலிடம் வழிப்பறி செய்வதையே தொழிலாக செய்து வந்துள்ளது.
வழிப்பறி செய்த பணத்தில், ஜாம்பஜார் பகுதியில் உடற்பயிற்சி கூடமும், ஈ.சி.ஆர்., பகுதியில் ரிசார்ட் ஒன்றும், சன்னி லாய்டு வாங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.