ரூ.2,000 கோடியில் 600 கி.மீட்டரில் இரண்டு புதிய மின் தொடர்கள்
ரூ.2,000 கோடியில் 600 கி.மீட்டரில் இரண்டு புதிய மின் தொடர்கள்
ADDED : ஆக 29, 2011 12:37 AM

தமிழகத்தில் வீணாகும் காற்றாலை மற்றும் சூரிய மின்சாரத்தைப் பயன்படுத்தவும், மீதமாகும் மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு விற்கும் வகையிலும், 2,000 கோடி ரூபாயில், இரண்டு மின் தொடர்களை அமைக்க, மின் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகம் முழுவதும், போதிய மின் தொடர் வசதியின்றி, வீணாகும் காற்றாலை மின்சாரத்தை, சரியாக பயன்படுத்த மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக 2,000 கோடி ரூபாயில், தனியார் நிதியுதவியுடன், இரண்டு மின் தொடர்கள் அமைக்கப்படும். முதல் மின் தொடர், 1,200 கோடி ரூபாய் செலவில், நெல்லை மாவட்டம் கயத்தாரிலிருந்து, 156 கி.மீ., நீளத்திற்கு காரைக்குடி வரை அமைக்க, டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. பின், காரைக்குடியிலிருந்து கரூர் அருகே உள்ள புகலூருக்கும், அங்கிருந்து சென்னை சோழிங்கநல்லூர் அருகே ஒட்டியம்பாக்கம் துணை மின் நிலையத்திற்கும் மின் தொடர் அமைக்கப்படும். இந்த மின் தொடர், ஒட்டியம்பாக்கத்திலிருந்து தேசிய மின் தொடர் இருக்கும் ஸ்ரீபெரும்புதூர் கலிவந்தப்பட்டு துணை மின் நிலையத்திற்கும், அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் தேசிய தெற்கு மின் தொடர் அமைப்புக்கும் இணைப்பு ஏற்படுத்தப்படும்.
இதற்காக, கயத்தார் மற்றும் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில், 400 கே.வி., திறன் கொண்ட துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதேபோல், கயத்தாரிலிருந்து சேலம் மாவட்டம் கானாடிப்பட்டி துணை மின் நிலையத்தை இணைத்து, இரண்டாவது மின் தொடர் அமைக்கப்படும். இந்த மின் தொடர், பிற மாநில மின் தொடருடன் இணைக்கப்படும். எதிர்காலத்தில், தமிழக மின் வாரியத்தில் அதிகரிக்கும் மின் உற்பத்தியை, நமது பயன்பாட்டுக்கு போக, பிற மாநிலங்களுக்கு விற்க, இரண்டாவது மின் தொடர் பயன்படுத்தப்படும். இந்த தொலைநோக்கு திட்ட மின் தொடர்கள், மொத்தம், 600 கி.மீ., தூரத்தில் அமைய உள்ளன.
இதுகுறித்து மின் வாரிய உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: இரண்டு புதிய மின் தொடர்களால், தென்மாவட்டங்கள் மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து, காற்றாலை மின் உற்பத்தியை எளிதாக, தமிழக மின் வாரிய பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும். காற்றாலை மின்சாரம் வீணாவது தடுக்கப்படுவதுடன், அதன் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தையும், தமிழக மின் வாரியத்திற்கு கூடுதல் மின்சாரமும் கிடைக்க இத்திட்டம் பயன்படும். இதற்கான பணிகள், இன்னும் 10 நாட்களில் துவங்கப்பட உள்ளது.
காற்றாலை மற்றும் சூரிய மின்சாரம், மரபுசாரா எரிசக்தி என்பதால், அதன் உற்பத்தி மற்றும் பயன்பாட்டு பணிக்காக, மத்திய அரசு ஒவ்வொரு மாநில அரசுக்கும் நிதி ஒதுக்கும். இந்த நிதியில், 3,800 கோடி ரூபாய் ஒதுக்க, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நமது சிறப்பு நிருபர்