ரூ.2,000 நிவாரணம் ஒருநாள் செலவுக்கே பத்தாது: பிரேமலதா
ரூ.2,000 நிவாரணம் ஒருநாள் செலவுக்கே பத்தாது: பிரேமலதா
ADDED : டிச 06, 2024 06:54 AM

துாத்துக்குடி : துாத்துக்குடி விமான நிலையத்தில், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா நேற்று அளித்த பேட்டி:
மழை வெள்ளத்தால் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலுார், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி என பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஆனால், எதிர்க்கட்சிகள் வயிற்றெரிச்சலில் பேசி வீண் விளம்பரம் தேடுகின்றன என முதல்வர் கூறி இருக்கிறார். இதில் விளம்பரம் தேட ஒன்றும் இல்லை.
அமைச்சர் பொன்முடி மீது மக்கள் சேற்றை வாரி வீசுகின்றனர். தி.மு.க., பேனர்கள் கிழிக்கப்படுகின்றன. ஒட்டுமொத்த மக்களும் மறியல் செய்கின்றனர். அந்த அளவில் தான் இந்த ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சியில் தேனாறும், பாலாறும் ஓடுகிறது என புகழ வேண்டும் என முதல்வர் நினைக்கிறார்.
இந்த ஆட்சி உண்மையிலேயே நல்ல ஆட்சி என்றால், அதை மக்கள் தான் சொல்ல வேண்டும். இயற்கை சீற்றத்தை யாராலும் தடுக்க முடியாது.
ஆனால், முன்கூட்டியே சரியாக திட்டமிட்டு தொலைநோக்கு திட்டங்களை தீட்டி இருந்தால், பாதிப்பு இந்தளவுக்கு இருந்திருக்காது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அரசு அறிவித்துள்ள 2,000 ரூபாய் நிவாரணம், ஒருநாள் செலவுக்கு கூட பத்தாது. மக்கள் சிறுக சிறுக சேர்த்த அத்தனை பொருட்களையும் இழந்துள்ளனர். உயிரைத் தவிர அவர்களிடம் வேறு ஏதும் இல்லை.
ஓட்டுக்கு கொடுத்தது போல 2,000 ரூபாய் கொடுத்தால், தாங்கள் பட்ட கஷ்டங்களையெல்லாம் மக்கள் மறந்துவிடுவர் என அரசு நினைக்கிறது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரருக்கு 10,000 ரூபாய் அரசு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விளைநிலங்களுக்கு குறைந்தபட்சம் ஏக்கருக்கு 50,000 முதல், 1 லட்சம் ரூபாய் வரை கொடுத்தால் தான் விவசாயிகள் மீண்டு வர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.