மத்திய அரசிடம் வாங்கிய ரூ.22 கோடி சும்மா கிடக்குது
மத்திய அரசிடம் வாங்கிய ரூ.22 கோடி சும்மா கிடக்குது
ADDED : மே 06, 2025 06:24 AM

மதுரை: பழநியில் பழநி தண்டாயுதபாணி சித்த மருத்துவக் கல்லுாரி அமைப்பதற்கான இடம் கையகப்படுத்தப்பட்டது. மத்திய அரசிடம் ரூ.22 கோடி நிதி வாங்கி இரண்டாண்டாகியும் கல்லுாரி துவங்கவில்லை.
சித்தா டாக்டர்கள் கூறியதாவது: பழநியில் பழநி தண்டாயுதபாணி சித்த மருத்துவக் கல்லுாரி அமைப்பதற்கான இடம் கையகப்படுத்தப்பட்டு, மத்திய அரசிடம் 22 கோடி நிதி உதவி பெற்றும் இன்னும் கல்லுாரி துவங்கப்படாமல் உள்ளது.
நாமக்கல்லில் புதிய சித்த மருத்துவக் கல்லுாரி ஏற்படுத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 50 படுக்கையுள்ள மருத்துவமனை கட்டப்பட்டு விட்டது. மருத்துவமனை ஆரம்பித்து இரண்டாண்டுகள் கழித்தே கல்லுாரி ஆரம்பிக்க முடியும். இதுவரை கல்லுாரிக்கான முதற்கட்ட பணிகள் கூட ஆரம்பிக்கவில்லை. அடிப்படை வசதிகள், மருந்துகள், டாக்டர்களும் முழுமையாக இல்லை.
இந்தாண்டு சட்டசபையில் சித்த மருத்துவம் பற்றிய புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கவில்லை. அதே நேரம் சென்னை அரும்பாக்கத்தில் யுனானி கல்லுாரிக்கு கூடுதல் கட்டடம், யோகா, இயற்கை மருத்துவத்திற்கு கூடுதல் கட்டடம், மதுரை திருமங்கலம் ஹோமியோபதி கல்லுாரி, நாகர்கோவில் ஆயுர்வேத கல்லுாரிக்கு கூடுதல் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
சென்னை மற்றும் திருநெல்வேலியில் உள்ள சித்தா கல்லுாரிகளுக்கு விடுதி வசதியில்லை. தமிழக அரசு சித்த மருத்துவத்தை புறக்கணித்து வருகிறது.
மாநில ஆயுஷ் சொசைட்டியில் இந்திய மருத்துவத்துறை இணை இயக்குநர் பணியிடத்தில் சித்தா டாக்டரை நியமிக்காததால் மாநிலம் மற்றும் மத்திய அரசின் திட்டங்களில் சித்த மருத்துவம் புறக்கணிக்கப்பட்டு யோகா, இயற்கை மருத்துவம் முன்னிலைப்படுத்தப்படுகிறது.
பழநியில் 5 ஆண்டுக்கு முன் பழனியாண்டவர் கல்லுாரிக்கு பின்புறம் இடம் தேர்வு செய்யப்பட்டது. மத்திய அரசிடம் இரு தவணைகளாக நிதி வாங்கி இரண்டாண்டுக்கு மேலாகிறது. தாமதம் இன்றி கல்லுாரியை துவங்க வேண்டும் என்றனர்.